நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வீடு கட்ட முடியாததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை சாமியார்மடம் அருகே பரிதாபம்

சாமியார்மடம், செப்.10: சாமியார்மடம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட, சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டம் சாமியார்மடம் அடுத்த வாழ்வச்சகோஷ்டம் அருகே உள்ள குன்னம்பாறை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி குசுமம். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். மூத்த மகன் அஜிஸ் (25), தாயாருடன் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. புதிதாக வீடு கட்டிய பிறகே திருமணம் செய்ய வேண்டும் என அஜிஸ் எண்ணி இருந்தார். சமீபத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கி உள்ளனர். ஆனால் அந்த நிலம் தொடர்பாக, அருகே வசிக்கும் நபருக்கும், குசுமத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இரு தரப்பினரும் மாறி, மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இது தொடர்பாக பத்மநாபபுரம் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தாயார் குசுமம், நீதிமன்றத்துக்கு சென்ற பின், அஜிஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர், நீதிமன்றத்துக்கு சென்று விட்டு குசுமம் திரும்பி வந்த போது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்க வில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டுக்குள் அஜிஸ் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதை பார்த்ததும் தாயார் குசுமம் கதறி அழுதார். தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அஜிஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீடு கட்ட முடியாமல் போனதை எண்ணியும், தனது தாயார் நீதிமன்றத்துக்கு அலைந்து திரிவதை எண்ணியும் அஜிஸ் மிகவும் வருத்தப்பட்டுள்ளார். இதனால் மனம் உடைந்து அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Suicide victim ,suicide ,court ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே வரதட்சணை...