×

உரிய பேருந்துகள் இல்லாததை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சிதம்பரம், ஆக. 22: சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலை கல்லூரிக்கு சிதம்பரம் மற்றும் பு.முட்லூர் பகுதியில் இருந்து உரிய பேருந்துகள் விடப்படாததை கண்டித்து சிதம்பரம் அரசு கலை கல்லூரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் அமைந்துள்ளது சிதம்பரம் அரசு கலை கல்லூரி. இங்கு சுமார் மூவாயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் வந்து படித்து வருகின்றனர்.  இக்கல்லூரி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலையில் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ஷிப்ட் முறையில் இயங்கி வருகிறது. சிதம்பரத்தில் இருந்து கல்லூரிக்கு ஒரு சில அரசு பேருந்துகள் மட்டும் சென்று வருகிறது. இதனால் அனைத்து மாணவர்களும் உரிய நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மதியமும் ஒரு சில பஸ்கள் மட்டும் வருகிறது. அதுவும் மாணவர்களுக்கு வகுப்பு விடுவதற்கு முன் சென்று விடுவதால் பெரும்பாலான மாணவர்கள் கொளுத்தும் வெயிலில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்கின்றனர்.
மேலும் பரங்கிப்பேட்டை, பு.முட்லூர் பகுதியில் இருந்து சி.முட்லூருக்கு பஸ்கள் இல்லாததால் பெரும்பான்மையான மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு நடந்தே சென்று வருகின்றனர். தற்போது சி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக பரங்கிப்பேட்டைக்கு ஒரு சில அரசு நகர பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சில் கால் வைக்க கூட இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் உள்ளது. மேலும் சி.முட்லூரில் தற்போது ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் சிதம்பரம் மற்றும் கடலூர் பகுதிகளில் இருந்து வருகிறார்கள். போதிய பேருந்துகள் இல்லாததால் அவர்கள் அனைவரும் அவதியுறுகின்றனர். சி.முட்லூரில் அரசு பள்ளி, வங்கி, வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் இயங்கி வருகிறது. சி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக நகர பேருந்துகள் குறைவான அளவிலே ஓடுகின்றன. எனவே, மேலும் சில அரசு நகர பேருந்துகளை பரங்கிப்பேட்டை வரை அல்லது பு.முட்லூர் வரை இயக்க வேண்டும் என்றும், இந்த வழித்தடத்தில் கடலூருக்கு சில பேருந்துகள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். பேருந்துகள் இல்லாததை கண்டித்து மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED உரிய ஏற்பாடுகள் செய்யாததால் கடலூரில்...