×

இந்தியாவின் சொத்துகள் ஜப்தியில் இருந்து தப்பின ஒன்றிய அரசு தரும் ரூ.7,900 கோடியை வாங்கிக் கொள்ள கெய்ர்ன் சம்மதம்: வெளிநாடுகளில் தொடர்ந்த வழக்குகள் வாபஸ்

புதுடெல்லி: கடந்த 2012ம் ஆண்டு முன் தேதியிட்ட வருமான வரி விதிப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டம் இந்தியாவின் வரி முறையை முன் தேதியிட்டு மாற்றியது. இதனால், 2006-07ல் இங்கிலாந்தின் கெய்ர்ன் நிறுவனம் இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவன மறுசீரமைப்பு செய்ததன் மூலம் மூலதன ஆதாயம் பெற்றதற்காக, ரூ.10,000 கோடியை வரியாக செலுத்த வேண்டுமென கடந்த 2014ல் வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த கெய்ர்ன் நிறுவனம், பின்னர் அந்த தொகையை செலுத்தியது.இருப்பினும், இதை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்தில் கெய்ர்ன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம், கெய்ர்ன் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு  வசூல் செய்த வருமான வரியில் ரூ.8,000 கோடியை திரும்ப வழங்க தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஏர் இந்தியா உள்ளிட்ட இந்திய அரசின் சொத்துக்களை கையகப்படுத்த அனுமதி கோரி கெய்ர்ன் நிறுவனம் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, முன்தேதியிட்ட வருமான வரி சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம், ரூ.7,900 கோடி பாக்கி தொகையை கெய்ர்ன் நிறுவனத்திற்கு திருப்பி தருவதாக ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டது. தற்போது, கெய்ர்ன் நிறுவனம் இந்த தொகையை பெற்றுக் கொள்ள சம்மதித்துள்ளது. இது குறித்து அதன் சிஇஓ சைமன் தாம்சன் லண்டனில் அளித்த பேட்டியில், , ‘‘இந்திய அரசின் யோசனையை எங்களின் பங்குதாரர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்திய அரசு வழங்குவதாக கூறும் ரூ.7,900 கோடியை வாங்கிக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த தொகை கிடைக்கப் பெற்றதும், அடுத்த ஓரிரு நாட்களில் இந்திய அரசுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்கையும் வாபஸ் பெறுவோம்’,’ என்றார். இதன் மூலம், கெய்ர்ன் நிறுவனத்தின் ஏழு ஆண்டுகால சட்டப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. மேலும், வெளிநாடுகளில் உள்ள ஏர் இந்தியாவின் சொத்துகள் உட்பட ஒன்றிய அரசின் பல்வேறு சொத்துக்கள், ஜப்தியில் இருந்து தப்பியுள்ளன….

The post இந்தியாவின் சொத்துகள் ஜப்தியில் இருந்து தப்பின ஒன்றிய அரசு தரும் ரூ.7,900 கோடியை வாங்கிக் கொள்ள கெய்ர்ன் சம்மதம்: வெளிநாடுகளில் தொடர்ந்த வழக்குகள் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Cairn ,Union government ,New Delhi ,India ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...