×

பயிர்களை அறுவடை செய்து உலர்த்த முடியாமல் விவசாயிகள் திணறல்-பருவம் தப்பிய மழை படுத்தும் பாடு

உடுமலை : உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில்  25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர்.  பருவம் தப்பி தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாகுபடி செய்த பயிர்களை  விற்பனை செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.உடுமலை மற்றும்  மடத்துக்குளம் தாலுகாவில்  கொமரலிங்கம், சாமுராயப்பட்டி, உரல்பட்டி, பாப்பாங்குளம், கிருஷ்ணாபுரம்,  கருப்பசாமி புதூர், மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு, மயிலாபுரம்,  ருத்திராபாளையம், பெருமாள் புதூர், எளையமுத்தூர், மலையாண்டிக வுண்டனூர்  உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான விவசாயிகள்  வெங்காயம், தக்காளி, மிளகாய், புடலை, அவரை, பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகள்  மட்டுமின்றி உளுந்து, கம்பு, சோளம் உள்ளிட்ட தானிய வகைகளையும் சாகுபடி  செய்திருந்தனர். அமராவதி ஆற்று பாசனம், கிணற்று பாசனம், கால்வாய் பாசனம்  போன்றவற்றோடு மேற்கு தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள கிராமப்பகுதிகளில்  போர்வெல் அமைத்தும் காய்கறிகள் பயிரிட்டிருந்தனர்.இந்நிலையில் கடந்த 2  வாரமாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அறுவடை செய்த உளுந்து போன்ற  தானியங்களை வெயிலில் உலர்த்தி வியாபாரத்திற்கு தயார் செய்ய முடியவில்லை.  இதே போல தக்காளி, வெங்காயம், மிளகாய் போன்றவையும் தொடர் மழை காரணமாக அழுகி  மகசூல் குறையத் துவங்கி உள்ளன. கம்பு போன்ற தானியங்களும் தொடர் மழைக்கு  தாக்குபிடிக்கவில்லை. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் காய்கறிகளை  சந்தைப்படுத்த முடியாமல் கிடைத்த விலைக்கு விற்ற விவசாயிகள் தற்போது பெய்து  வரும் காலம் தப்பிய மழையால் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.இது குறித்து  சாமுராயப்பட்டி விவசாயி பாலசுப்பிரமணி கூறியதாவது: ஆண்டுதோறும் புரட்டாசி  15க்கு பின்னர்தான் பருவமழை துவங்கும். அதற்குள் காய்கறிகள், தானியங்களை  அறுவடை செய்து பதப்படுத்தி விற்பனை செய்து விடுவது வழக்கம். ஆனால் இந்த  ஆண்டு கடந்த 15 நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் மழை காரணமாக 2 மாதம் 3  மாத பயிர்களான வெங்காயம், தக்காளி, கம்பு, உளுந்து, மிளகாய் போன்றவற்றின்  மகசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உளுந்து செடிகளை காய வைக்க  முடியாத அளவிற்கு மேகம் மப்பும், மந்தாரமுமாக உள்ளது. ஏக்கருக்கு ஒரு லட்சம்  ரூபாய் செலவழித்து சின்ன வெங்காயம் பயிரிட்ட நிலையில் மழை காரணமாக  வெங்காயத்தை பட்டறை போட்டு பதப்படுத்த முடியவில்லை. தற்போது ஒரு கிலோ சின்ன  வெங்காயத்தை 8 ரூபாய்க்கு வியபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் அறுவடை  கூலி மட்டுமே கைக்கு கிடைக்கும். இதே போல கம்பு, உளுந்து போன்ற தானியங்களையும் வெயிலில் உலர்த்தி காய வைக்க முடியாத அளவிற்கு மழை  தொடர்வதால் அவை பூசணம் பிடிக்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையில்  உள்ளனர். தென்னை, கரும்பு போன்றவற்றிற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கலாம்.  ஆனால் சிறு, குறு விவசாயிகள் இந்த மழையால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து  வருகின்றனர்.கடந்த ஆண்டு ஊரடங்கால் விளைந்த காய்கறிகளை சந்தைப்படுத்த  முடியவில்லை. இந்த ஆண்டு பருவம் தப்பிய மழை எங்களை பாடாய் படுத்துகிறது என்றார். …

The post பயிர்களை அறுவடை செய்து உலர்த்த முடியாமல் விவசாயிகள் திணறல்-பருவம் தப்பிய மழை படுத்தும் பாடு appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Udumalai, Madathukulam taluga ,Rainfall ,
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்