×

அதிமுக ஆட்சி மீது அமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு கைத்தறி துறை வளர்ச்சிக்கு எந்த முயற்சியும் செய்யவில்லை: திமுக-அதிமுக மோதல்

சென்னை:  தமிழக சட்டப் பேரவையில் நேற்று கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்து பேசியதாவது: காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளி பூங்காவுக்கு ஆய்வு செய்ய சென்றோம். 2010ல் தொடங்கியது. எதுவும் செய்யவில்லை. (இதற்கு பதில் சொல்ல அதிமுக உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் பேச வாய்ப்பு கேட்டு எழுந்தார். அவருக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்). முன்னாள் அமைச்சரை சொல்லச் சொல்லுங்கள், கடந்த 5 ஆண்டுகளில் எப்போதாவது அவர் அங்கு ஆய்வுக்கு சென்றாரா? ( அதிமுக உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் உள்பட அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேச வாய்ப்பு கேட்டனர். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது.) எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி்: அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளை சொல்லும்போது பதில் சொல்லாமல் எப்படி இருக்க முடியும். அமைச்சர் பேசும்போது பல முறை ஒருமையில் பேசி எல்லோருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறார்.அவை முன்னவர் துரைமுருகன்: அமைச்சர், அவைக்கு புறம்பான வார்த்தைகளை பேசவில்லை. உண்மைக்கு மாறான தகவலை சொல்லவில்லை. அவர் ஒரு யதார்த்தவாதி. பொதுவாகத் தான் பேசுகிறார். முதல் முறையாக அமைச்சராகி பேசுகிறார். அமைச்சர் காந்தி: கடந்த ஆட்சியில் என்ன நடந்தது. நெசவாளர்கள் எந்த கட்சியாக இருந்தாலும், யார் உண்மையான நெசவாளி என்பதை தான் பார்க்க வேண்டும். முதல்வர் இப்போது நமது ஆட்சி என்று தான் சொல்கிறார். (இதற்கும் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆட்சபேனை தெரிவித்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது) அவை முன்னவர் துரைமுருகன்: நெசவாளர்கள் எல்லா கட்சியிலும் இருக்கிறார்கள் என்று தான் சொன்னார். கட்சி பேதம் பார்க்கக்கூடாது என்று தான் சொன்னார். இதில் என்ன தப்பு.  (அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி எழுந்து பேச அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதி வழங்காததால் அதிமுகவினர் முன் இருக்கைக்கு வந்தனர். இதையடுத்து சபாநாயகர் மு.அப்பாவு அவர் பேச அனுமதி அளித்தார்)  கே.பி. முனுசாமி: கடந்த கால ஆட்சியை பற்றி ஆதாரம் இல்லாமல் குறைகளை அமைச்சர் சொல்லிக் கொண்டே இருக்கிறார். (அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கோஷம் எழுப்பினர். அதேநேரம் கே.பி.முனுசாமி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் முன்வரிசைக்கு வந்து கோஷமிட்டனர். பதிலுக்கு திமுக உறுப்பினர்களும் முன்வரிசைக்கு வந்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார்.)சபாநாயகர் மு.அப்பாவு: அதிமுக உறுப்பினர்கள் பேசுவது எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது. இருக்கைக்கு சென்றால் மட்டுமே பேச அனுமதி தருவேன்.(ஆனாலும் அதிமுக உறுப்பினர்கள் இருக்கைக்கு செல்லாமல் தொடர்ந்து கோஷமிட்டவாறே நின்று கொண்டிருந்தனர்.)சபாநாயகர் மு.அப்பாவு: நான் எழுந்து நிற்கிறேன். உங்கள் இடத்திற்கு செல்லுங்கள். அமைச்சர் பேசி முடிக்கட்டும். உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். நம்முடைய முதல்வர் உறுப்பினர்கள் பேசும் வார்த்தைகள் மென்மையாக இருக்கட்டும் என்று தான் சொல்கிறார். யாரையும் புண்படும்படி பேச வேண்டாம் என்று ஆளும் கட்சி உறுப்பினர்களை முதலவர் ஏற்கனவே கண்டித்திருக்கிறார். எனவே நீங்களும் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.கே.பி.முனுசாமி: தொடர்ந்து பல நாட்களாக அவை அமைதியாக தான் நடக்கிறது. ஆக்கப்பூர்வமாக நடக்கிறது. ஆனால் இங்கே இருக்கும் ஒரு உறுப்பினர் தரக்குறைவாக பேசுகிறார்.சபாநாயகர் அப்பாவு: அந்த உறுப்பினர் பேசிய எந்த வார்த்தைகளும் அவைக்குறிப்பில் இல்லை. இல்லாத வார்த்தைகளை பேச வேண்டாம்.அமைச்சர் காந்தி: அதிமுக ஆட்சி காலத்தில் கோ ஆப்டெக்ஸ் நஷ்டத்தில் இயங்கியது. 2016-2018ம் ஆண்டுகளில் உதவாத துணிகளை வாங்கியிருக்கிறார்கள். (இதற்கும் அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஓ.எஸ்.மணியன் பேச வாய்ப்பு கேட்டார். ஆனால் சபாநாயகர் வாய்ப்பு வழங்கவில்லை) இந்த ஆட்சியில் கோ ஆப்டெக்சை லாபகரமாக இயக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு: ஓ.எஸ்.மணியன் இருக்கையில் அமருங்கள். இப்படி சத்தம் போட்டால் நியமா?. அமைச்சர் பேசி முடிந்ததும் வாய்ப்பு தருகிறேன். நீங்கள் அமைச்சராக இருந்தவர். கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது யாருக்காவது மைக் கொடுத்திருந்தா நாங்கள் தருகிறோம். இப்போது ஜனநாயக முறையில் அவை நடக்கிறது. அமைச்சர் பேசி முடித்த பின்பு தான் வாய்ப்பு தர முடியும்.அவை முன்னவர் துரைமுருகன்: அதிமுக உறுப்பினர்கள் பண்ணுவது மிக அநியாயம். ஆளும்கட்சியில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை சொல்ல அவருக்கு உரிமை உண்டு. அமைச்சர் பேசுவதில் தவறு இருந்தால், நீங்கள் அவர் மீது அவை உரிமை மீறல் கொண்டு வாருங்கள். அதை விட்டுவிட்டு பேசவே கூடாது என்று சொன்னால் அது ஜனநாயகம் அல்ல. அமைச்சர் பேசி முடித்ததும் வாய்ப்பு தருவதாக சபாநாயகர் சொல்லியிருக்கிறார். அவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து உட்காருங்கள்….

The post அதிமுக ஆட்சி மீது அமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு கைத்தறி துறை வளர்ச்சிக்கு எந்த முயற்சியும் செய்யவில்லை: திமுக-அதிமுக மோதல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Chamari ,Chennai ,Department of Linen and Fabric, Kadar, Village Industries and Handicrafts Department ,Tamil Nadu Law Assembly ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...