×

மழை பெய்ய வேண்டி பாறை சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சன வழிபாடு

திருவில்லிபுத்தூர், ஜூன் 25: மழை பெய்ய வேண்டி, திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாறை சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் செய்து வழிபாடு நடத்தினர். திருவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில், செண்பகத்தோப்பு வனப்பகுதிக்கு நுழையும் வழியில், ஒரு பாறையில் சக்கரத்தாழ்வார் சுவாமி அருள்பாலித்து வருகிறார். செண்பகத்தோப்பு மற்றும் அழகர்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள்,
இந்த சக்கரத்தாழ்வாரை வணங்கி, வனப்பகுதிக்குச் செல்வர். மேற்கு தொடர்ச்சிமலை செண்பகத்தோப்பு பகுதியில் உருவாகும் காற்று, மழை ஆகியவை, இந்த பாறை சக்கரத்தாழ்வாரை வணங்கி அனுமதி பெற்றுத்தான் திருவில்லிபுத்தூரில் மழையாக பொழியும் என்பது ஐதீகம்.

இதனால், சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் செய்து, அவர் மனம் குளிர்ந்தால், நல்ல மழை பெயும் என்பது நம்பிக்கை. இதனடிப்படையில், மழை பெய்ய வேண்டி பாறை சக்கரத்தாழ்வாருக்கு நேற்று சிறப்பு திருமஞ்சன பூஜைகள் நடைபெற்றன. இதனையொட்டி, அவருக்கு மாகாப்பு, சந்தனக்காப்பு, இளநீர், பால், சந்தனம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது ஏராளமான பெண் பக்தர்கள் ‘ஆழிமழைக்கண்ணா’ பாசுரங்களைப் பாடினார். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை இயற்கை ஆர்வலர் அரையர் வடபத்ரசாயி சுவாமிகள், மதுரை பாலாஜி, கோபி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Rock Emperor ,
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை