×

வெம்பாக்கம் தாலுகாவில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஊருக்குள் நுழையவிடாமல் தடை பாதுகாப்பு கேட்டு மணமக்கள் கலெக்டர், எஸ்பியிடம் மனு

திருவண்ணாமலை, ஜூன் 25: சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால், ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஊருக்குள் நுழையவிடாமல் ஒதுக்கி வைத்திருப்பதாக கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் குடும்பத்துடன் மணமக்கள் புகார் மனு அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா, கொடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி பூங்காவனம்(45). இவர் தன்னுடைய மகன் குமார்(25), மருமகள் ஈஸ்வரி மற்றும் உறவினர்களுடன் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

என்னுடைய மூத்த மகன் குமாரும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த தகவல் தெரிந்ததால், கடந்த 6ம் தேதி அவசர அவசரமாக வேறொரு நபருடன் ஈஸ்வரிக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், அந்த திருமணத்தில் ஈஸ்வரிக்கு உடன்பாடு இல்லை. எனவே, திருமணம் நடந்த அதே நாளில், வீட்டில் இருந்து வெளியேறி, என்னுடைய மகன் குமாருடன் சென்று ஆரணியில் முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பிறகு, இருவரும் சென்னையில் தங்கியிருந்தனர். இந்நிலையில், இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தகவல் அறிந்த, கொடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிலர், என்னையும், என்னுடைய உறவினர்களையும் மிரட்டினர்.
மேலும், என்னுடைய மகனும், மருமகளும் ஊருக்குள் வந்தால் கொலை செய்வதாக மிரட்டினர். இதனால், எங்களையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர். எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும், ₹1 லட்சம் அபராதம் விதித்தனர். எனவே, எங்களை ஊருக்குள் செல்ல விதித்துள்ள தடையை நீக்கி, ஊருக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : town ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி