×

ஆடு, மாடு, கோழிகளை கடித்து குதறும் தெருநாய்கள்

காரைக்குடி, ஜூன் 19:  காரைக்குடி நகராட்சி பகுதியில் வெறிநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை கால்நடைகளை கடித்து குதறும் அவலம் அரங்கேறிவருகிறது. காரைக்குடி நகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு தெருக்களிலும் 20க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் அவ்வப்போது நாய்களிடம் கடிவாங்குவது தொடர் கதையாகி வருகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை விரட்டி சென்று கடிக்கும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது. வெறிபிடித்து சுற்றித்திரியும் நாய்கள் சிறுவர்களை அதிகம் கடித்து குதறுகின்றன. நாய் கடிபட்டு அரசு மருத்துவமனைக்கு தினமும் 30க்கும் மேற்பட்டோர் சிகச்சைக்கு வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். வீடுகளில் அடைத்து வைத்து இருக்கும் ஆடுகள் மற்றும் கோழிகளை நாய்கள் கடிப்பது வாடிக்கையாகி வருகிறது.
 
இதுபோன்ற தொடர் சம்பங்கள் நடந்தும் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் ரேபிஸ் நோய் தாக்கக் கூடிய அபாயம் உள்ளது. தொடர் கதையாகி வரும் இந்த நாய் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமூகஆர்வலர் ராஜா கூறுகையில், காலை நேரத்தில் வாக்கிங் செல்வோர் முதல் இரவில் தனியாக வருவோர் வரை அனைவரையும் நாய்கள் பதம் பார்க்கின்றன. ஒரு சில பகுதிகளில் பல ஆண்டுகளாக வெறி பிடித்த நாய்கள் சுற்றி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.


Tags : chickens street ,
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...