×

மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் கோவையில் மூன்று நாளாக சாலையில் வீணாக ஓடும் குடிநீர்

கோவை, ஜூன் 19:மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருக்கும் நிலையில், கோவை போத்தனூர் மெயின்ரோட்டில் கடந்த மூன்று நாட்களாக சாலையில் குடிநீர் ஆறு போல் வீணாக சென்று கொண்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒரு குடம் குடிநீர் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. ஆழ்துழாய் கிணறுகள் வறண்டு கிடக்கிறது. லாரி தண்ணீரை மட்டுமே நம்பி பொதுமக்கள் விடிய விடிய காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பஞ்சம் காரணமாக தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் குடிநீர் மட்டுமின்றி கழிவறைக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளின் கழிவறைகள் பூட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு குடிநீர் பஞ்சத்தை தீர்க்க ஆலோசனை நடத்தி வருகிறது.

 கோவை மாவட்டத்தில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறைந்த நேரம் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை போத்தனூர் மெயின்ரோடு போலீஸ் நிலையம் அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த மூன்று நாட்களாக குடிநீர் ஆறு போல் சாலையில் ஓடி வீணாக சாக்கடையில் கலந்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.  மாநிலம் முழுவதும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அலைந்து, பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில், கோவையில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக சாலையில் குடிநீர் வீணாக சென்று கொண்டு இருக்கிறது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், குழாய் உடைப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக அதை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடிநீரை வீணடிக்க கூடாது எனவும் சமூகஆர்வலர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : road ,state ,water famine coimbatore ,
× RELATED அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி...