×

7வது ஊதியக்குழுவை அமல்படுத்த கோரி மேல்நிலைதொட்டி இயக்குபவர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூன் 18: கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 7வது ஊதியக் குழுவினை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்தவாறு 7வது ஊதியக் குழுவினை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மேலும் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி முதல் இந்த புதிய ஊதிய குழுவினை கணக்கிட்டு வழங்கிட வேண்டும், கடந்த 2000ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் பணியில் சேர்ந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ 4 ஆயிரத்து 400ம், அதன் பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ 3 ஆயிரத்து 900ம் மாத ஊதியமாக வழங்கிட வேண்டும், 2010ம் ஆண்டு முதல் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக சிஐடியு தொழிற்சங்கம் சார்புடைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் முனியாண்டி மற்றும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Superintendent operators ,cleaning workers ,
× RELATED சுவற்றில் இயற்கை காட்சிகள் 525 தொழிலாளர்கள் பணி நீக்கம் கூடாது