நீடாமங்கலம்,ஜூன்18: நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயிலில் அன்னதானம் வழங்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிழக்கு வீதியில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களுள் ஒருவரான பிரதாப சின்னம மகாராஜாவால் கி.பி.1761ம் ஆண்டு கட்டப்பட்ட கோயில் சந்தான ராமசுவாமி கோயிலாகும். இக்கோயில் நீடாமங்கலத்தில் சிறப்பு பெற்று விளங்குகிறது.இக்கோயிலுக்கென திருவிழாக்கள் நடத்தவும் பசி பட்டினியில் வாழும் பக்தர்கள்,பாமரர்கள்,ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கவும் அக்காலத்தில் அக்கோயிலுக்கென நூற்றுக்கனக்கான ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டு பல்வேறு ஊர்களில் விவசாயிகள் சாகுபடி செய்து அதற்கான குத்தகை நெல்களை கோயில் நிர்வாகத்திடம் கொடுத்து வருகின்றனர்.இக்கோயிலில் ஆடி தேர்,ராமவநமி விழா ,தெப்பம், தேர் என பல்வேறு திருவிழாக்கள் கோயில் நிலங்களில் வரும் வருமானத்தை வைத்து செலவு செய்யப்படுவது வழக்கம்.ஆனால் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது. பிறகு அன்னதானம் வழங்கவில்லை.தெப்ப திருவிழா, தேர் திருவிழா நடக்கவில்லை.அடிக்கடி நடை பெறும் சிறு சிறு விழாக்களுக்கு உபயதாரர்களே செலவு செய்து மண்டகபடி செய்து திருவிழாக்கள் நடைபெறுகிறது.கோயில் வருமானத்தில் கோயிலுக்கென என்ன செலவு செய்யப்படுகிறது என பக்தர்கள்,சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.சம்மந்தப்பட்டதுறை நிர்வாகத்தினர் மக்களின் நலன் கருதி கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது போல் மீண்டும் வழங்கவேண்டும் என பக்தர்கள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.