×

மஞ்சூரில் சூறாவளி காற்றுடன் மழை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மஞ்சூர், ஜூன் 14: மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 20 இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் நடுக்காட்டில் பயணிகள் தவித்தனர்.நீலகிரியில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளநிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மஞ்சூர், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் மழையுடன் இடைவிடாமல் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. நேற்று முன்தினம் மாலை மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் வரலாறு காணாதவகையில் சூறாவளி காற்று வீசியது. சூழற்றி அடித்த சூறாவளி காற்றில் கடைகள், வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள், ப்ளக்ஸ் போட்டுகள் மற்றும் கூரை வீடுகளின் மேலிறுந்த ஓடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டது. மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்பட்டது. கடைவீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் மஞ்சூர் பஜாரில் பெரும்பாலன கடைகளும் இரவு 7மணிக்கே அடைக்கப்பட்டது.மேலும் மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் தாய்சோலா முதல் மீக்கேரி பகுதி வரை சுமார் 20கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊட்டியில் இருந்து மஞ்சூர் வழியாக கிண்ணக்கொரை மற்றும் இரியசீகை சென்ற அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் உதவி கோட்டப் பொறியாளர் சாமியப்பன், உதவி பொறியாளர் பாலசந்தர், சாலை ஆய்வாளர்கள் சுரேஷ், நஞ்சூண்டன் மற்றும் 20கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் இரவோடு இரவாக சாலையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பல இடங்களில் பெரிய மரங்கள் விழுந்து கிடந்ததால் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து நள்ளிரவு 2மணிக்கு மரங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் இரவு 8மணிக்கு கிண்ணக்கொரை கிராமத்திற்கு சென்றடைய வேண்டிய பயணிகள் நள்ளிரவு 2மணி வரை நடுகாட்டில் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Manchur ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி