திருத்துறைப்பூண்டியில் குப்பைக் கிடங்கு தீப்பிடித்து எரிவதால் புகை மூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 14: திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு வேதாரண்யம் சாலையில் அமைந்துள்ளது. நகர பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை இங்கு கொட்டி வைப்பது வழக்கம். கொட்டிய குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது.இதனை ஒட்டிய முன் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைதரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு குறைந்தவிலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இங்கு மலைபோல் அமைந்துள்ள குப்பை மேடுகளுக்கு மிக அருகாமையில் சாலையோரம் லாரி உரிமையாளர் சங்க கட்டிடம், ஆயில் ஸ்டோர் மற்றும் பெட்ரோல் பங்க், லாரி, கார் ஒர்க் ஷாப் உள்ளிட்டவை இயங்கி வருகிறது.இந்த சாலை வழியாக வேதாரண்யம், பட்டுக்கோட்டை பேருந்துகள், லாரிகள், கார்கள் உள்ளிட்டவை சென்று வருகிறது.

இந்நிலையில் இந்த குப்பைக்கிடங்கில் தீப்பிடித்து எரிவதும் அதனை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடுவதும் வாடிக்கையாகி விட்டது.இந்த குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய பல முறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அடிக்கடி தீ பிடித்து எரிந்து வருவதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.அது மட்டுமல்ல சுற்று வட்டார பகுதிகளில் வசிப்பவர்களும், வாகனங்களில் செல்வோரும் பாதிக்கப்படுவதுடன் தொடர் புகைமூட்டத்தால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.வாகனம் ஓட்டுவோர், பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கை அப்புறப்படுத்தி மேலும் அடிக்கடி தீ விபத்து ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : garbage fire ,
× RELATED மேட்டூர் நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ