×

குப்பை கிடங்காகி வரும் கமலாலய குளத்தில் படகு சவாரி நிறுத்தம்

நாமக்கல், ஜூன் 14:  நாமக்கல் கமலாலய குளத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதால், படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டை, தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைக்கோட்டையின் தென்கிழக்கு பகுதியில், பேருந்து நிலையம் எதிரே கமலாலய குளம் உள்ளது.

ஒரு காலத்தில் நாமக்கல் நகர மக்களின் குடிநீர் தேவையை இந்த குளம் பூர்த்தி செய்து வந்தது. மாசடைந்து காணப்பட்ட இக்குளம் தூர்வாரப்பட்டு, சிறு பூங்காக்களும் அமைக்கப்பட்டது. கமலாலய குளத்தின் ஒரு புறத்தில் நேரு பூங்காவும், மற்றொரு கரையில் அம்மா பூங்காவும் உள்ளது. குளத்தில் படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் நகராட்சிக்கு கணிசமான வருமானமும் கிடைத்து வந்தது.

இதனிடையே, போதிய பராமரிப்பின்மையால், கமலாலய குளத்திற்குள் செடி,கொடிகள் வளர்ந்து, சுமார் 5 அடி உயரத்திற்குள் கோரைப்புற்கள் முளைத்துள்ளது. மேலும், அங்கிருக்கும் ஒரு சில வணிக நிறுவனங்களில் சேரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளை குளத்தில் கொட்டி வருகின்றனர். இது தவிர இரவு நேரங்களில், அப்பகுதியில் நிறுத்தப்படும் தள்ளுவண்டி கடைகளிலிருந்தும், குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. பூங்காவிற்கு வரும் சிலர், தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு, மீதமாகும் கவர் மற்றும் காலி தண்ணீர் பாட்டில்களை குளத்தில் வீசி செல்வதால், கமலாலய குளம் குப்பை கிடங்காக மாறி வருகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘சமீபத்தில் பெய்த மழையால், கமலாலய குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதேவேளையில் தண்ணீரில் அடித்து வரப்படும் குப்பை கழிவுகளுடன், குளத்தில் கொட்டப்படும் குப்பை கழிவுகளின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், அறிவிக்கப்படாத குப்பை கிடங்காக மாறி வரும் கமலாலய குளத்தில் கடும் துர்நாற்றம் வீசிகிறது.

இதனால், நாமக்கல் வரும் சுற்றுலா பயணிகளும், பூங்காவிற்கு வரும் உள்ளூர் மக்களும், படகு சவாரி செய்ய விரும்புவதில்லை. இதனால், குளத்திலேயே நிறுத்தப்பட்டுள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளது. எனவே, நாமக்கல் நகராட்சி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்தி, கமலாலய குளத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தி, மீண்டும் படகு சவாரியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Kamalalaya pond ,
× RELATED தை அமாவாசையை முன்னிட்டு கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்