பள்ளிபாளையம் அருகே காவிரியில் மூழ்கி தொழிலாளி பலி

பள்ளிபாளையம், ஜூன் 14: பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்(55). விசைத்தறி தொழிலாளியான இவருக்கு கவிதா என்ற மனைவியும், சஞ்சிவ் மற்றும் நிதிஷ் ஆகிய மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம், ஆவத்திபாளையம் ஆதி நித்தியானந்தா மடத்தின் அருகே காவிரி ஆற்றில் துணி துவைக்க செல்வதாக கூறிவிட்டு தங்கவேல் சென்றுள்ளார். பின்னர், வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சிக்குள்ளான குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றனர். அங்கு, காவிரி ஆற்றங்கரையோரம் செருப்பு மற்றும் துணிகள் மட்டும் கிடந்தது.

தங்கவேலுக்கு நீச்சல் தெரியாத நிலையில் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியில் தங்கவேல் சடலமாக மிதந்தார். துணி துவைப்பதற்காக சென்ற இடத்தில் கால் தவறி ஆற்றில் விழுந்தது உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளிபாளையம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: