×

விருதுநகர் மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை ஜோர் மாணவர், இளைஞர்களை குறிவைக்கும் வியாபாரிகள் போதை கடத்தல் தடுப்பு பிரிவு கவனிக்குமா?

விருதுநகர், ஜூன் 13: விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து போதைப் பொருளை வியாபாரம் செய்வதாக கூறுகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளின் விற்பனை நடந்து வருகிறது. விருதுநகரில் பர்மா காலனி, அய்யனார் நகர், ஆத்துப்பாலம் அருப்புக்கோட்டை மேம்பாலம், கருப்பசாமி நகர், பழைய பஸ்நிலையம், பாறைப்பட்டி தெரு ஆகிய பகுதிகளில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து போலீசாருக்கு தேரிந்தும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பாறைப்பட்டி தெருவில் போதை மருந்து மற்றும் ஊசிகளை நடுவீதியில் வைத்து பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் கஞ்சா அடித்தும், போதை ஊசி போட்டும் தெருக்களில் கூச்சலிடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புலனாய்வுத்துறை, விருதுநகர் மாவட்ட சிறப்பு காவல் பிரிவு ஆகியோருக்கும் தகவல் தெரிவித்தும், போதைப்பொருள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர்.

தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, அந்தந்த பகுதி டிஎஸ்பியின் கீழ் இயங்கும் காவல்நிலையங்களில், வழக்குகளை நடத்தி வருகிறது. போலீசார் தங்கள் வேலையுடன் சேர்ந்து, போதைப்பொருள் தடுப்பு பணியை கவனிக்க வேண்டியிருப்பதால், கண்காணிக்க முடியாமல் போவதாக தெரிவிக்கின்றனர்.

எனவே, விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைப் பொருள் விற்போர் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘ மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதற்கு சூழல்களே காரணமாக அமைகின்றன. சிலருக்கு சக மாணவர்களிடமிருந்து தொற்றிக்கொள்கிறது. பெற்றோர் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், அவர்களால் பிள்ளைகளை கவனிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

இதனால், பிள்ளைகள் போதைக்கு அடிமையாகின்றனர். சில மாணவர்கள் படிக்கும்போதே பேப்பர் போடுவது, திருமண மண்டபங்களில் உணவு பரிமாறுவது, விருந்து உபசரிப்பு போன்ற பணிகளுக்குச் செல்கின்றனர். அப்போது, தன்னைக் காட்டிலும் வயது மூத்தவர்களிடம் பழகுகின்றனர். அவர்களிடம் சிகரெட் பிடிப்பதை பழகுகின்றனர். இப்பழக்கம் நாளடைவில் போதைக்குள் தள்ளுகிறது.  

கஞ்சா வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகம்:
கஞ்சா வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. குறுகிய காலத்தில் சொகுசு வீடு, கார் என முன்னேறி விடுகின்றனர். இதனால், குடும்பத் தொழிலாக செய்கின்றனர். தந்தை கஞ்சா வியாபாரம் செய்து கைது செய்யப்பட்டால், மகன், மனைவி விற்பனையை தொடர்கின்றனர். கைது செய்யப்பட்டவர் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் கஞ்சா விற்பனையை தொடர்கிறார். மதுவை காட்டிலும் கஞ்சா குறைந்த விலைக்கு கிடைப்பதால் பள்ளி, கல்லூரி மாணவ்ர்கள் கஞ்சாப் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் என்றார்.  

போதைக்கு அடிமையான ஒருவர் கூறுகையில், ‘கஞ்சா எளிதாக கிடைக்கிறது. காசு இல்லாவிட்டாலும், விற்பனையாளர்களிடம் சென்று, ஒரு தம் கேட்டால் கொடுப்பார்கள். அடுத்தமுறை போகும்போது காசு கொடுத்து வாங்குவோம். இதனால், போதைக்கு அடிமையாகி விட்டேன்’ என்கின்றார்.

எங்கெங்கு கஞ்சா சாகுபடி...
தமிழகத்தில் கோவை, ஈரோடு, தேனி,  திண்டுக்கல், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 350  ஏக்கரில்  கஞ்சா சாகுபடி நடப்பதாக கூறுகின்றனர்.

Tags : drug dealer ,student ,youngsters ,Joran ,Virudhunagar district ,
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...