×

பள்ளி திறந்து ஒரு வாரமாகியும் புத்தகங்கள் வழங்காததால் மாணவர்கள் கல்வி பாதிப்பு

சிவகங்கை, ஜூன் 13: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வகுப்புகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. கடந்த கல்வி ஆண்டிற்கான முழு ஆண்டு தேர்வு விடுமுறை முடிந்து 2019-2020ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன்.3ல் தொடங்கின. தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கான புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் அனைத்தும் பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் புத்தகங்கள் வழங்கப்பட வில்லை. மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் அனைத்து வகுப்புகளுக்கும் நோட்டுகள் வழங்கப்பட வில்லை. பிளஸ்2 வகுப்பிற்கு வேதியியல், விலங்கியல், உயிரியல், கணிதம், கணினி பயன்பாடு, கணக்கு பதிவியல் புத்தகங்கள் வழங்கப்பட வில்லை. பத்தாம் வகுப்பிற்கு சமூக அறிவியல், கணிதம் பாடங்களுக்கான புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

ஒன்பதாம் வகுப்பிற்கு அறிவியல் பாட புத்தகங்களும், ஏழாம் வகுப்பிற்கு சமூக அறிவியல் பாட புத்தகமும் வழங்கப்பட வில்லை. எட்டாம் வகுப்பிற்கு அனைத்து புத்தகங்களும் வழங்கப்படாமல் உள்ளன. கல்வி அலுவலகங்களில் புத்தகங்கள், நோட்டுகள் குறித்து தலைமையாசிரியர், ஆசிரியர் கேட்கும் நிலையில், அது குறித்து தங்களுக்கே எந்த தகவலும் வரவில்லை என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளிக்கல்வித் துறை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி திறக்கப்படும் முதல் நாளே புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் வழங்க வேண்டும் என அறிவித்த நிலையில் குறிப்பிட்ட சில வகுப்புகளுக்கும் மட்டுமே புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்பட்டு 10 நாட்களான நிலையில் இதுவரை புத்தகங்கள் வழங்கப்படாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக ஏதாவது ஒரு வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு இல்லாத நிலை ஏற்படும். ஆனால் தற்போது பல்வேறு வகுப்பு மாணவர்களுக்கும் வழங்க வில்லை. உடனடியாக புத்தகங்கள், நோட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : school openings ,
× RELATED பள்ளி திறப்பில் விபரீத விளையாட்டு...