×

காளையார்கோவிலில் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

காளையார்கோவில், ஜூன் 13: காளையார்கோவிலில் உள்ள வாள்மேல்நடந்த அம்மன் கோவில் தெப்பக்குளத்திற்குச் செல்லும் நீர்வரத்து கால்வாயில் குப்பைகளை கொட்டி ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்தது. தற்போது அகற்றும் பணி தொடங்கியது. காளையார்கோவிலில் உள்ள வாள்மேல் நடந்த அம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு நீர்வரத்து கால்வாய் சோமசுந்தரம் நகர், மூர்த்தி நகர், அகல்கரை வழியாக மழைநீர் அம்மன் குளத்திற்கு செல்கிறது. வரத்து கால்வாய் பராமரிக்காமல் விட்டதால் கருவேல மரங்கள் புதர்போல் மண்டி கிடந்தது.

மேலும் அப்பகுதிகளில் உள்ள பொது மக்கள் குப்பைகளையும் கழிவு நீரையும் கால்வாயில் விட்டு வருகின்றார்கள். மழை காலங்களில் அப்பகுதியில் வீட்டிற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள தூம்புகளில் கொட்டப்படும் குப்பைகள் அடைத்து கொள்வதால் மழைநீர் அம்மன் குளத்திற்கு செல்வது முழுமையாக தடைபட்டு விடுகின்றது.

மேலும் அம்மன் குளத்தை சுற்றி கருவேல மரங்கள் இருப்பதால் குளத்தின் சுவர்களில் உள்ள பாறைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. அம்மன் குளத்தை சுற்றி குப்பை, கழிவுகள் கொட்டப்படுவதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எப்போதும் சிறிதளவு தண்ணீர் கிடக்கும் அம்மன் குளமும் தற்போது ஆக்கிரமிப்பால் வறண்டு விட்டன.

சமூக ஆர்வலர் தாழையம்மாள் காளை கூறுகையில், அம்மன் குளத்துத் தண்ணீர் சில ஆண்டுகளுக்கு முன்னால் காளையார்கோவில் பகுதியில் உள்ள மக்கள் குடிதண்ணீராகப் பயன்படுத்தி வந்தார்கள். சிறு மழை பெய்தால் கூடக் குளத்திற்கு தண்ணீர் வந்து விடும். ஆனால் இப்பொழுது பெரிய மழை பெய்தாலும் தண்ணீர் வருவது கடினமாக உள்ளது.

அம்மன் குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் அப்பகுதி பொது மக்களால் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். மேலும் கழிவுநீர், குப்பைகளைக் கொட்டி விடுகின்றார்கள் .மழைக் காலங்களில் அனைத்தும் குளத்திற்குள் வந்து விடுவதினால், சுகாதாரமற்ற நீராக மாறி விடுகின்றது. தற்போது சமூக ஆர்வலர்கள் தங்களுடைய சொந்த பணத்தை செலவு செய்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி வருகின்றார்கள்.

Tags : canal agitation ,
× RELATED அண்ணனூர் ரயில் நிலையம் அருகில்...