×

பிறப்பு சான்றிதழ் பெற 12 இலக்க எண் கட்டாயம்

சிவகங்கை, ஜூன் 13: சிவகங்கை மாவட்டத்தில் கர்ப்பிணிகள் பதிவு செய்து பெற்ற 12 இலக்க எண் இருந்தால் மட்டுமே, அவர்களது குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்ததாவது: பொது சுகாதாரத் துறையில் தாய், சேய் நல திட்டத்தின் கீழ், கர்ப்ப கால சேவைகள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த சேவையை கிராம சுகாதார செவிலியர்கள், நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் தங்களுடைய பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களை ஆரம்பத்திலேயே பதிவு செய்து கர்ப்ப கால பராமரிப்பு, தடுப்பூசி, ஆய்வகப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை குறித்த விவரங்களை பெறுகின்றனர். இதன் மூலம் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப் படுகின்றனர். இந்த விபரங்கள் குழந்தை நல பதிவேடு மற்றும் பிக்மி எனப்படும் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.“பிக்மி” என்ற மென்பொருள் உதவியுடன் ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் 12 இலக்க பேறுசார் குழந்தை நல அடையாள எண் கணினி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த “பிக்மி” அடையாள எண்ணை அந்தந்த பகுதி கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பொது சேவை மையங்கள் மற்றும் மருத்துவ உதவி எண் 102-ஐ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
http://picme.tn.gov.in/picme public என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்வதுடன் பதிவு எண்ணை சம்பந்தப்பட்ட கிராம சுகாதார செவிலியர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். குழந்தையின் பிறப்புச் சான்றிதழை பெறுவதற்கு கர்ப்ப காலத்தில் பதிவு செய்த 12 இலக்க எண்ணை கட்டாயம் அளிக்க வேண்டும். டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவியைப் பெறுவதற்கும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு தெரிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...