×

ஆத்தூர் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மெகா மோசடி கிராம மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை

செம்பட்டி, ஜூன் 13: ஆத்தூர் ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மெகா மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கிராம மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.ஆத்தூர் ஒன்றியம், பாளையன்கோட்டை ஊராட்சியில் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக 100 நாள் வேலையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் முறைகேடுகள் நடந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், பிரவான்பட்டி சட்ட கல்லூரி மாணவர் முருகன், பாளையங்கோட்டை திமுக மகளிர் அணி நிர்வாகி பாப்பாத்தி உட்பட பொதுமக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.குறிப்பாக, பாளையன்கோட்டை ஊராட்சியில் 100 நாள் வேலைகளில் முறைகேடுகள் நடந்ததாக செய்தி வெளியான உடன், மண்டல துணை வட்டாடர வளர்ச்சி அலுவலர் குமரவேல் தலைமையில் அதிகாரிகள் பாளையன்கோட்டை ஊராட்சியில் ஆய்வு செய்தனர். இதில், சுமார் 60 பேர் வரை பணிக்கு வரவில்லை என ஆப்சென்ட் போட்டனர். அதன்பின்னர் தொடர்ந்து அனைத்து ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் தொடர்ந்து முறைகேடு நடப்பதாக கூறி செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுப்பிரமணியத்திடம் புகார் மனுக்களை கொடுத்த வண்ணம் இருந்தனர்.

அவரும் புகார் மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக்கூறி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு முன்னிலைக்கோட்டை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி, ஊராட்சி மன்ற செயலர் மற்றும் 100 நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என, ஆத்தூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இந்நிலையில் நேற்று அக்கரைப்பட்டி ஊராட்சி மல்லையாபுரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் 100 நாள் வேலைப்பணிக்கு சென்று மதிய உணவு சாப்பிட சென்று விட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆய்வுக்கு சென்ற பணி ஆய்வாளர் ராணி 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஆப்சென்ட் போட்டுள்ளார். இதைக் கண்டித்து பொதுமக்கள் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுப்பிரமணியிடம் முறையிட்டனர். உடனடியாக செம்பட்டி காவல் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மதிய சாப்பாட்டிற்கு சென்ற எங்களுக்கு ஆப்சென்ட் போட்ட, அதிகாரிகள், ஊராட்சியில் முறைகேடாக, அதிகாரிகள் துணையுடன் வேலைக்கு வராதவர்களை, வேலைக்கு வந்ததாக கணக்கு காட்டி பணம் எடுக்கின்றனர். ஆத்தூர் ஒன்றியத்தில் 2 கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் தொடர் முறைகேடுகள் நடைபெறுகிறது. இதில், தனியார் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் முன்னுரிமை கொடுத்துவிட்டு, பணிதள பொறுப்பாளர்களை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது. இதனால், பாளையன்கோட்டை, அக்கரைப்பட்டி, முன்னிலைக்கோட்டை உட்பட அனைத்து ஊராட்சிகளில் தினசரி 100 முதல் 200 வரை போலியான பயனாளிகளை பதிவு செய்கின்றனர். இதனால், 100 நாள் வேலை திட்டத்தில் மகா முறைகேடுகள் நடைபெறுகிறது. எனவே, 100 நாள் வேலை மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தால், ஆத்தூர் ஒன்றியத்தில் நடைபெறும் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களையெடுக்க முடியும், மேலும், ஆத்தூர் யூனியனில் சிறப்பு தணிக்கை நடத்தி முறைகேடுகளை கண்டுபிடிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Siege ,office ,Mega Fraud Rural Union Union ,Attur Union ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...