×

விரைவில் திறக்க கோரிக்கை திருமயம், அரிமளம் பகுதியில் டாஸ்மாக் கடைகளின் கிளைபோல் செயல்படும் டீக்கடை, பெட்டிக்கடைகள்

திருமயம், ஜூன் 13: திருமயம், அரிமளம் பகுதியில் டாஸ்மாக் கடைகளின் கிளைகளாக செயல்படும் டீக்கடை, பெட்டிக்கடைகள் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.அரிமளம், திருமயம் பகுதியில் சுமார் 12க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனிடையே கோர்ட் டாஸ்மாக் கடைகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி டாஸ்மாக் கடைகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருந்து சற்று தூரத்தில் திறக்கப்பட்டது.இருந்த போதிலும் குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நடமாடும் பகுதியில் குடிப்பதை ஆங்காங்கே காணமுடிகிறது. இந்நிலையில் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள ஒரு சில பகுதிகளில் கோர்ட் தடை உத்தரவுக்கு பின்னர் அதிகாரிகள் டாஸ்மாக் கடை திறக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே கடை திறக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடை, டீக்கடைகள், டாஸ்மாக் கடைகளின் கிளைகள் போல் செயல்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது பற்றி அரிமளம் பகுதி மக்களிடம் கேட்டபோது, ஒரு சிலர் காலையில் மது அருந்திய பின்னரே வேலைக்கு செல்கின்றனர். அப்படிப்பட்ட குடிமகன்கள் காலை 7 மணிக்கே டாஸ்மாக் கடை பகுதிக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் குடிமகன்களுக்கு டாஸ்மாக் கடை அருகிலோ அல்லது கிராம பகுதியில் உள்ள சிறிய கடைகளிலோ மது கிடைக்கிறது. டாஸ்மாக் கடையில் விற்பனை செய்வதைவிட ரூ.40 அதிகமாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் மது வாங்கி செல்கின்றனர். அதே சமயம் டாஸ்மாக் கடையை விட்டு 5 கி.மீ. அல்லது அதற்கு அதிக தூரத்தில் உள்ள குடிமகன்களுக்கு வீட்டருகே உள்ள டீக்கடை, பெட்டிக்கடைகளில் மது தாராளமாக கிடைக்கிறது. இதன் மூலம் டாஸ்மாக் கடைகளின் கிளைகள் போல் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள ஒரு சில கடைகள் செயல்படுகிறது என்றனர்.

டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் விற்பனையாளர்கள் கிராமப்புறத்தில் உள்ள ஒரு சில கடைகளுக்கு தாராளமாக மது வழங்கி அவற்றை விற்பனை செய்து கமிஷன் பெறுகின்றனர் என்ற புகாரும் எழுந்துள்ளது. அதே சமயம் அதனை தடுக்க வேண்டிய அதிகாரிகளும் இதற்கு துணை போவதால் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. காந்தி ஜெயந்தி உள்ளிட்ட அரசு அறிவிக்கும் நாட்களில் டாஸ்மாக் கடை மூடும் உத்தரவு இருந்தாலும் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மது தங்கு தடையின்றி கிடைக்கின்றது.இதன் மூலம் கிராம பகுதியில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை அதிகாரிகள் பாழாக்கிவிட்டனர் என கிராம மக்கள் குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.


Tags : Tirumayam ,
× RELATED புதுக்கோட்டை அருகே வழக்கு...