×

திருப்போரூர் ஒன்றியம் பொன்மார் ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதால் இடிந்து விழும் நிலையில் கிணறு

திருப்போரூர், ஜூன் 13:  திருப்போரூர் ஒன்றியம் பொன்மார் ஊராட்சியில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியின் நீரை பயன்படுத்தி சுமார் 300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. நாளடைவில் நகர்ப்புற வளர்ச்சி காரணமாக, பொன்மார் சென்னையை ஒட்டி இருப்பதால் விவசாயம் செய்வது முற்றிலும் நின்றது. இதனால், விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறி வருகின்றன. இந்த ஊராட்சியில் வசிக்கும் சுமார் 1,500 குடும்பங்களுக்கு சித்தேரியில் 2 இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு, அதன் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சித்தேரியினை ஆழப்படுத்துகிறோம் என்ற பெயரில், பொதுப்பணித்துறை நிர்வாகம், ஏரியின் மண்ணை எடுத்து விற்பனை செய்ய தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால், 3 அடி முதல் 5 அடி ஆழம் வரை மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், அனுமதியை மீறி, 20 அடி ஆழம் வரை மண் எடுக்கப்பட்டு, சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த சட்ட விரோத ஏரி மண் விற்பனை ஒரு புறம் இருக்க, இவ்வாறு 24 மணி நேரமும் மண் எடுப்பதால் ஏரியில் உள்ள குடிநீர் கிணறு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
குடிநீர் கிணற்றை ஒட்டி, 15 அடி ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டதால், கிணற்றை சுற்றி மிக பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ராட்சத பொக்லைன் இயந்திரங்களால் மண் எடுப்பதால், எந்த நேரமும் குடிநீர் கிணறு இடிந்து விழுந்து விழும் அபாய நிலையில் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த குடிநீர் கிணறு இடிந்து விட்டால், பொன்மார் கிராம மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர்கள் வேதனையுடன் கூறினர்.

இதுபோன்று ஏரியில், மண் எடுக்க உள்ளூர் அரசியல்வாதிகளே துணை போவதாகவும், இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், இதுபோன்று நீர்நிலைகள் பாதிக்கப்படும் வகையில் ஏரி மண்ணை எடுக்க அனுமதி வழங்கியது எப்படி எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags : Ponnar Lake ,Thripperur Union ,
× RELATED கோடை வெயில் முடிந்து மழைக்காலம்...