×

திருத்தணி நகராட்சியில் காற்றோட்டம் இல்லாத கட்டிடத்தில் அங்கன்வாடி மையம்: தவிக்கும் குழந்தைகள்

திருத்தணி, ஜூன் 13:திருத்தணி நகராட்சியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட சிமென்ட்ஷீட் கூரை வீட்டில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. காற்றோட்டம் இல்லாததால் புழுக்கத்தில குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.எனவே, காற்றோட்டமான இடத்துக்கு அங்கன்வாடி மையத்தை மாற்ற வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருத்தணி நகராட்சி, 12வது வார்டான பெரியார் நகர், பால விநாயகர் கோவில் தெருவில் ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. இம்மையத்தில் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இம்மையத்துக்கு ஒன்றிய பராமரிப்பில் இருந்து தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் இல்லாததால், இந்த அங்கன்வாடி மையம் ஒரு தனியாரின் வீட்டில் வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த மையத்தின் மேற்கூரை தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட சிமென்ட் ஷீட்களினால் வேயப்பட்டு உள்ளது. தற்போதைய கோடை வெயிலின் அனல் தாக்கத்தினால், இங்கு படிக்கும் குழந்தைகள் புழுக்கத்தில் தவித்து வருகின்றனர்.

இதனால் குழந்தைகளின் உடலில் கொப்புளங்களும், எரிச்சலும் ஏற்பட்டு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரே அறைக்குள் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடைந்து கிடப்பதால், வெயிலின் தாக்கத்தில் மாலை நேரத்தில் வீடு திரும்பும்போது மிகுந்த சோர்வுடன் காணப்படுகின்றனர். இது குறித்து பெற்றோர் கூறுகையில், இந்த அங்கன்வாடி மையம் அரசு விதிமுறைகள் கொஞ்சமும் இல்லாத கட்டிடத்தில் இயங்குகிறது. கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் ஷீட்டால் வேயப்பட்டுள்ளது.

காற்றோட்ட வசதிக்காக ஜன்னல் அமைக்கப்படவில்லை. கதவு தகரத்தால் செய்யப்பட்டுள்ளது. மிக குறுகிய கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளதால் சுத்தமான காற்று கிடைக்காததால், அனலின் தாக்கத்தினாலும் குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, குழந்தை
களின் நலனை கருத்தில் கொண்டு அங்கன்வாடி மையத்தை காற்றோட்டமான வேறு கட்டிடத்திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Anganwadi Center ,area ,municipality ,Tiruttani ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்