×

அத்திப்பேடு மக்கள் வழங்கிய கல்வி சீரால் அரசு தொடக்கப்பள்ளிக்கு ஏ.சி வசதி: மாணவர்கள் மகிழ்ச்சி

ஊத்துக்கோட்டை, ஜூன் 13: பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த பூச்சி அத்திப்பேடு கிராமத்தினர் வழங்கிய கல்வி சீரால், இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிக்கு ஏ.சி வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,  பெற்றோர், தங்களது குழந்தைகளை  ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளது. ஆசிரியர்களும் மகிழ்ச்சியுடன் பாடங்களை நடத்தி வருகின்றனர்.

பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் 1962ம் ஆண்டு அரசு நடுநிலை பள்ளி தொடங்கப்பட்டது. 2011ம் ஆண்டு உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, தனியாக பிரிந்தது. இதனால், இப்பள்ளி தொடக்க பள்ளியாக மாறியது. இந்த பள்ளிக்கு 2012ம் ஆண்டு வெஸ்லி ராபர்ட், தலைமையாசிரியராக பொறுப்பேற்றார்.

அப்போதிலிருந்து, அரசு பள்ளியில் மாணவர்களை அதிகளவில் சேர்த்தார். இப்பள்ளியில் கணினி கல்வி, ஸ்மார்ட் வகுப்பறை, யோகா கல்வி என மாணவர்களுக்கு பல்வேறு திறமைகளை புகுத்தினார். இதனால், தனியார் பள்ளிக்கு இணையாக, அரசு பள்ளியில் மாணவர்களை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் சேர்க்க ஆரம்பித்தனர்.

கடந்த வருடம் இப்பள்ளிக்கு முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ், ஏ.சி.யும், கிராம மக்கள் கல்விச்சீரும் வழங்கினர். இந்த கல்வியாண்டு தொடங்கி நேற்று முன்தினம் முதல் இப்பள்ளி மாணவர்கள் ஏ.சி வசதியுடன் தனியார் பள்ளிக்கு இணையாக படிக்க தொடங்கினர். பள்ளியில் ஏ.சி வசதியுடன் மாணவர்கள் படிக்க தொடங்கியதால், பள்ளியின் சேர்க்கை உயர்ந்து, தற்போது இப்பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது. இதனால், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மகிழ்ச்சியாக பாடம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ‘எங்களின் பிள்ளைகளின் படிப்பிற்காக தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியைகள் பாடுபடுகின்றனர். அவர்களை பாராட்டுகிறோம்’’ என்றனர்.

Tags : institutions ,Adipede Public School AC School ,
× RELATED அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI...