×

ஊத்துக்கோட்டை அருகே பழங்குடியின மக்கள் திடீர் உண்ணாவிரதம்: அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை, ஜூன் 13: ஊத்துக்கோட்டை அருகே மின்சாரம், சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், ரேஷன் கடை, சுடுகாடு உள்பட உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பழங்குடியின மக்கள் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை ஊராட்சி அஞ்சாத்தம்மன் கோயில் பகுதி ஆரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில்,  47  குடும்பங்களை சேர்ந்த  பழங்குடியின மக்கள் 300க்கும் மேற்பட்டோர் 20 ஆண்டுக்கு மேலாக வசித்து வந்தனர். அப்போது அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.  

இதையடுத்து கடந்த  2017ம் வருடம்  அப்போதைய  ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபா உஷா,  பாலவாக்கம் ஜெ.ஜெ.நகர், சிறுனியம் பகுதியில் தலா ஒரு சென்ட் நிலம் வழங்கினார். இதையடுத்து அவர்கள் அந்த இடத்துக்கு குடிபெயர்ந்தனர். ஆனால், குடிநீர், சாலை வசதி, மின்சார வசதி என  எந்த வித அடிப்படை வசதிகளும் அரசு செய்து தரவில்லை.

இதையடுத்து மீண்டும் கடந்த வருடம் ஏப்ரல் மாதம்  போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து குடிநீர் வசதி செய்து தரப்பட்டது.   ஆனால், மின்சாரம், சாலை மற்றும் சுடுகாடு வசதிகள் ஏதும் செய்து தரவில்லை. இந்நிலையில், கடந்த வருடம் ஜூன் மாதம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த  எல்லையன் (30) என்பவரை பாம்பு கடித்தது. அவரை அக்கம் பக்கத்தினர் கண்ணன்கோட்டை சித்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர்  எல்லையனை கடித்த பாம்பையும்  பிடித்து ஒரு சாக்கு பையில் கட்டினர். அடிப்படை வசதிகள் செய்து தராத அதிகாரிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த, அப்போதைய  தாசில்தார் ரவிச்சந்திரன் உடனடியாக பாலவாக்கம் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு  மின்சார வசதி செய்து தர வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பிறகு, மின்சார வசதிக்காக பணிகள் தொடங்கி கம்பம் நட்டனர். ஆனால், இதுவரை வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தரவில்லை. பல முறை முறையிட்டும் பயன் இல்லை.

இதனால், ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள், நேற்று தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நேற்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பதாகைகளை ஏந்தி சிறுனியத்தில்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்ததும் பெரியபாளையம் பிடிஓ ராஜா டி.வாசகி, உதவி பிடிஒ சுப்பிரமணி மற்றும் ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் அனுராதா, எஸ்ஐ. ராக்கி குமாரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, உயர் அதிகாரிகளிடம் பேசி  மின்வசதி உள்பட தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:
மின்சார வசதி மட்டுமல்லாமல் சுடுகாடு, சாலை மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும். மேலும், ரேஷன் பொருட்கள் வாங்க 15 கி.மீ தொலைவில் உள்ள குமரப்பேட்டை கிராமத்திற்கு செல்கிறோம். அந்த ரேஷன் பொருட்களை  பாலவாக்கம் ரேஷன் கடையில் வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.  எங்கள் கோரிக்கை நிறைவேற்ற காலம் கடத்தினால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags : hunger strike ,Uthukkottai ,
× RELATED பெரியபாளையம் காவல் நிலையத்தில்...