×

மின்துறை அமைச்சர் கோட்டாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் பணம் மோசடி: டிராவல்ஸ் உரிமையாளர் மீது புகார்

சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் கோட்டாவில் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா, ராஜகம்பீரம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (46) என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் அலுவலக பணிகள் காரணமாக அடிக்கடி சென்னை வரும்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள டிராவல்ஸ் உரிமையாளர் முனியன் என்பவரின் பழக்கம் ஏற்பட்டது. அப்போது என்னிடம் பல அமைச்சர்கள், அதிகாரிகள் நன்றாக தெரியும் என்றும், நிறைய பேருக்கு நான் அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளேன் என்று கூறினார். இதையடுத்து என்னுடைய மகள் என்ஜினியரிங் முடித்துள்ளார் என்று கூறினேன்.

உடனே அவர் மின்சாரத் துறையில் ஒப்பந்தப்பணி அடிப்படையில் வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு ரூ.5 லட்சம் பணம் கேட்டார். அவர் பேச்சை கேட்டு நான் அவரது வங்கி கணக்கில் ரூ.4 லட்சமும், நேரில் ரூ.1 லட்சம் என பணம் கொடுத்தேன். அப்போது அவர் 6 மாதத்தில் நியமன கடிதம் வாங்கி தருவதாக கூறினார். ஆனால் இதுவரை எந்த கடிதமும் வரவில்லை.

இதற்கடையே மின்சாரத்துறையில் 75 பேர் வெளிமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கியதாக செய்தித்தாளில் பார்த்து அவரிடம் கேட்டபோது, அது மத்திய அரசு பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் மகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் கோட்டாவில் வேலை வாங்கித்தருவதாக கூறினார். இதற்கிடையில் நான் அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது, அவர் ஒரு மோசடி பேர்வழி என்றும் தற்போது மோசடி வழக்கில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போடுவதாகவும் கூறினர்.

இதையடுத்து காவல் நிலையம் வந்த அவரை பிடித்து கேட்டபோது, மின்சாரத்துறை அமைச்சரிடம் என்னுடைய பெயரை சொல்லி பணத்தை வாங்கிக்கொள் என்று என்னை கீழே தள்ளிவிட்டு தாக்க முயன்றார். எனவே முனியனை கைது செய்து எனக்கு தர வேண்டிய ரூ.5 லட்சத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Traveler ,owner ,
× RELATED ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர்...