×

காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணைக்குழு அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதியில் ஆய்வு

உடுமலை,ஜூன்13: காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணை குழுவினர் நேற்று உடுமலை அருகே உள்ள அமராவதி அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மூலம் அமைக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அறிவுறுத்தலின் படி, துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு காவிரி நீர் பாயும் மாநிலங்களில் உள்ள நீர் தேக்கங்களில் நீர்வரத்து மற்றம் நீர்வெளியேற்றத்தை கணக்கிட அமைக்கப்படும் ஆன்லைன் மானிட்டரிங் சிஸ்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உள்ளனர். இதன்படி கர்நாடகம்,தமிழகம்,புதுவை மற்றும் கேரள மாநில அதிகாரிகள் கொண்ட இந்த துணைக்குழு ஆய்வு நடத்தி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த குழு கடந்த 4ம் தேதி கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையும், நேற்று முன்தினம் மேட்டூர் அணையையும், நேற்று பவானிசாகர் அணையையும் ஆய்வு செய்து அணைகளுக்கான நீர்வரத்து, நீர் வெளியேற்றம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக  நேற்று உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை பகுதியிலும், முக்கிய நீர்பிடிப்பு பகுதியான தேனாறு,பாம்பாறு, சின்னாறு சேரும் இடமான ஜீரோ பாயின்ட் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு பொறியளர் மோகன் முரளி,புதுவை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், கேரள மாநில பாசன உதவி இயக்குனர் சஜ் வீவ்குமார், இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியலாளர் அமுதா,அமராவதிஅணை  செயற்பொறியாளர் தர்மலிங்கம், திருமூர்த்தி அணை செயற்பொறியாளர் (பொறுப்பு) முத்துசாமி,  உதவி செயற்பொறியாளர்  சரவணன் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள அணைகளிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டு அடுத்த மாதம் இறுதிக்குள் காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என காவிரி நதி நீர் ஒழுங்காற்று  துணைக்குழுவினர் தெரிவித்தனர்.

Tags : dam water area ,Cauvery Water Dispensary Subcommittee ,Amarawati ,
× RELATED ஆந்திராவில் மதுபாட்டில்கள் ஏற்றி...