×

பூச்சி தாக்குதலில் பயிர்கள் சேதம் மருந்து அடித்தும் பயனில்லை தண்ணீர் பாய்ச்சுவதால் நஷ்டம் கவலையில் விவசாயிகள்

காரைக்குடி, ஜூன் 12:  கடும் வெயில், பருவ மழை பொய்த்து விட்டதால் தோட்டக்கலைப் பயிர்கள் கருகி வருவதோடு, புதுவிதமான பூச்சி தாக்குதலுக்கு உட்பட்டு விளைச்சலும் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் பொதுப்பணித் துறை மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்டு 500க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. சுமார் 5 ஆயிரத்து 500 எக்டேர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இவற்றில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே நெல் பயிரிடப்படுகிறது. மற்ற நிலங்களில் கத்தரி, மிளகாய், பாகற்காய், பூசணி, வெண்டைக்காய், முள்ளங்கி உள்பட பல்வேறு தோட்டக்கலை பயிர்கள், பயிர் செய்யப்படுகிறது. இப்பகுதியில் கண்மாய், கிணறு மற்றும் போர்வெல் பாசனத்தை நம்பி பயிர் செய்யப்படுகிறது. பெய்ய வேண்டிய பருவமழை பெய்யாததால் சாக்கோட்டை பகுதிகளில் உள்ள அனைத்து கண்மாய்களும் வறண்டு காணப்படுகிறது. மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறு மற்றும் போர்வெல்களில் தண்ணீர் இல்லை. இந்த ஒன்றியத்தில் பெரியகோட்டை, பெத்தாச்சிகுடியிருப்பு, சிறுகப்பட்டி, மித்ராவயல், புளியங்குடியிருப்பு, முள்ளங்காடு உட்பட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் கத்தரி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இவைகள் மதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, கொத்தமங்கலம், தேவகோட்டை, பள்ளத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கத்தரி செட்டிகளில் நோய் தாக்குதல் காரணமாக பூ மேல் நோக்கி வளர்ந்து அப்படியே உதிர்ந்து விடுகிறது. தவிர சில செடிகளில் சாம்பல் நிற பாதிப்பு ஏற்பட்டு இலைகள் கருகி விடுகின்றன. காய் பிடிக்கும் சமயத்தில் இதுபோன்ற நோய் தாக்குதல் வருவதால் ஏக்கருக்கு பல ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. அதேபோல் வெண்டை, புடலங்காய்களில் புதுவிதமான பூச்சி தாக்குவதால் போதிய விளைச்சல் இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வெயில் அதிகமாக உள்ளதால் மகசூல் இல்லை. நல்ல மருந்து கிடைப்பது இல்லை. கிடைக்கும் மருந்துகளை அடித்தாலும் பூச்சிகள் சாவது கிடையாது. வெண்டையில் தண்டு பகுதி தடித்து, இலைகள் சுருண்டு காணப்படுகிறது. இதனால் காய் விளைச்சல் இல்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் ரூ.5 ஆயிரம் கிடைப்பது கூட சிரமமாக உள்ளது. புடலங்காயை பொறுத்தவரை போதிய தண்ணீர் இல்லாததால் சிகப்பு கலரில் பூச்சிகள் தாக்கி வருகின்றன. போதிய தண்ணீர் இல்லாததால் போர்வெல் போட்டுள்ளவர்களிடம் இருந்து மணிக்கு ரூ.500 கொடுத்து தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விளைச்சல் குறைவு என்றனர்.

Tags : field ,pest attack ,
× RELATED அசாமில் 7 ரயில்கள் ரத்தால்...