×

அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர நிதியுதவி ஆசிரியர்கள் அதிருப்தி

சிவகங்கை, ஜூன் 12:  பத்தாம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து கூடுதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்க அரசே திட்டம் செயல்படுத்துவதற்கு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து பிளஸ்1, பிளஸ்2 படிக்க அரசு உதவித்தொகை வழங்குகிறது. அரசுப்பள்ளிகளில் படித்து கூடுதல் மதிப்பெண் எடுத்த பி.சி, எம்.பி.சி, சீர்மரபினர் மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். மாவட்டத்திற்கு பத்திற்கும் மேற்பட்டோர் வீதம் மாநிலம் முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை அரசே தனியார் பள்ளிகளில் சேர்க்க தேர்வு செய்கிறது. இவர்களுக்கு அரசே நிதியுதவி வழங்குகிறது. இவ்வாறு அரசுப்பள்ளிகளில் படித்து கூடுதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை அரசே தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் செயலுக்கு ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: தனியார் பள்ளிகளை தலை சிறந்த பள்ளிகளாக உருவகப்படுத்தி அரசுப்பள்ளி மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர அரசே ஊக்கப்படுத்தும் நிலை கவலைக்குரியதாகும். இந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் அரசுப்பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்றவர்கள் என்பதை அரசு நிர்வாகம் நினைவில் கொள்ள வேண்டும். இது போன்ற செயல்களால் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள்தான் சிறந்த பள்ளிகள் என்கிற மனநிலை உருவாகும். இதனால் தங்கள் படிப்பு மீது ஒரு அவநம்பிக்கை உருவாகும். ஏற்கனவே அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைவு, ஆசிரியர் பற்றாக்குறை என பல்வேறு பிரச்சனைகளால் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால் அரசுப்பள்ளிகள் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்றனர்.

Tags : Authors ,schools ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளை...