×

உள்நாட்டு இயந்திரங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்

திருப்பூர், ஜூன் 12:உள்நாட்டில் தயாரிக்கப்படும் இயந்திரங்களுக்கு  விதிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை, 5 சதவீதமாக குறைக்க சைமா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் வைக்கிங் ஈஸ்வரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:  பின்னலாடை  உற்பத்தியில் இந்தியாவின் போட்டி நாடுகளான சீனா, வங்கதேசம், வியட்நாம்  உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து, குறைந்த விலைக்கு ஆடைகள், துணி ரகங்கள்,  நமது நாட்டில் அதிகளவு இறக்குமதியாகின்றன. ஒரு சில பின்னலாடை  உற்பத்தியாளர்கள் நேரடியாக துணிகளை வாங்கி ஆடை தயாரிப்பில்  ஈடுபடுகின்றனர். இதனால், உள்நாட்டு நூல் மில்கள், நிட்டிங், விசைத்தறி  கூடங்களுக்கு ஆர்டர்கள் குறைந்து  வருகிறது. இந்த துறைகள் தற்போது, 25 சதவீத வர்த்தகத்தை இழந்துள்ளன. தொழில்  வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நூற்பாலை, நிட்டிங், விசைத்தறி ஆகிய மூன்று  துறைகளின் நலன் கருதி இறக்குமதி துணி, ஆடைகளுக்கு மத்திய அரசு அதிகமாக  வரிவிதிக்க வேண்டும்.  மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மெஷின்களுக்கு  விதிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை,5 சதவீதமாக குறைக்க வேண்டும். அந்நிறுவனங்கள் செலுத்தும் வரியை, அரசு, திருப்பி  அளிக்க வேண்டும். மேக் இன் இந்தியா என சொல்லிக்கொண்டு, ஆறு மடங்கு ஏற்றுமதி  செய்தால் தான், உள்நாட்டில் உற்பத்தியாகும் இயந்திரங்களுக்கு ஜி.எஸ்.டி.,  ரீபண்ட் கிடைக்கும் என்பது ஏற்புடையதாக இல்லை. உள்நாட்டு இயந்திரங்களுக்கு  18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின்  வாங்கும் சக்தி குறைந்துள்ளது. சீனாவிலிருந்து குறைந்த விலைக்கு  இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு இயந்திரங்கள்  விற்பனை குறைந்து நிறுவனங்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும்,ஆடை உற்பத்தி  துறைக்கான உள்நாட்டு இயந்திரங்களுக்கான வரியை குறைத்தால், தொழில் வளர்ச்சி  பெறும், வேலை வாய்ப்பும் பெருகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிக...