×

கோபியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கோபி, ஜூன் 12: கோபியில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணானது. கோபி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கும், பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு, சாந்தி தியேட்டர், பார்வதி நகர், வடக்கு பார்க், மொடச்சூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள மேல் நிலை தொட்டிகள் மூலம்   குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக குடிநீர் வழங்கப்படவில்லை. நேற்று முன்தினம் இரவு மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டது. அப்போது, பெரியார் திடல் அருகே மூன்று இடங்களில் தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், விடிய விடிய பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேறி அருகில் இருந்த கீரிப்பள்ளம் ஓடையில் வீணாகியது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்த பின்னரே நள்ளிரவில் ஆற்றில் மின்மோட்டார் இயக்கம் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,`கோபி நகராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பிரதான குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. உடைந்த குழாயை பெயரளவிற்கு சரி செய்வதால் மீண்டும்  உடைப்பு ஏற்படுகிறது. இதை நகராட்சி ஊழியர்கள் கண்காணித்து இருந்தால் உடைப்பு ஏற்பட்ட உடனே மின்மோட்டாரை நிறுத்தி சரிசெய்திருக்கலாம். ஆனால், அலட்சியமாக இருந்ததால் தண்ணீர் வீணாகியது’ என்றனர்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு