×

மாணவர்கள் பங்கேற்பு அரிமளம் அருகே கஜா புயல் தாக்கி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த குடிநீர் ஊரணி

திருமயம், ஜூன் 12: அரிமளம் அருகே கடந்தாண்டு வீசிய கஜா புயலில் சேதமடைந்த குடிநீர் ஊரணியின் சுற்றுச்சுவரை இதுவரை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரிமளம் அருகே பூனையன்குடியிருப்பு, உசிலம்பட்டி கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள அய்யன் ஊரணியில் உள்ள நீரை 12 ஆண்டுகளுக்கு முன்னர் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக குடிநீருக்காக ஊரணியில் நீர் எடுப்பதை தவிர்த்த அப்பகுதி மக்கள் மூதாதையர்கள் பயன்படுத்திய ஊரணியை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தனர். இதன்படி ஊரணியை சுற்றி கம்பி வேலிகள் அமைத்து ஊரணியின் நான்கு புறமும் சிமெண்ட் சுவர்கள் எழுப்பி பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில் அரிமளம் பகுதியில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் ஊரணியின் கிழக்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் சரிந்து 100 மீட்டர் சேதமடைந்தது. இது அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியது. இதனை சரி செய்ய பூனையன்குடியிருப்பு, உசிலம்பட்டி கிராம மக்கள் நடவடிக்கை எடுத்தனர். இருந்த போதிலும் முழுமையாக சரி செய்ய போதுமான நிதி மற்றும் பொருட்கள் வசதி இல்லாததால் புயலில் இடிந்த ஊரணியை சீரமைக்க முடியவில்லை. மக்கள் எடுக்கும் முயற்சியையும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இந்த ஊரணி அருகே அரசு பள்ளி இருப்பதால் பள்ளி மாணவர்கள் ஊரணிக்குள் இறங்கும்போது மண் சறுக்கி அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கஜா புயலில் இடிந்து விழுந்த அய்யன் ஊரணி சுற்றுச்சுவரை சீரமைத்து தர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : village ,ravine ,gulf storm ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...