×

குடிநீர் வழங்க வலியுறுத்தி சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை தேத்தான்காடு பெண்கள் ஆவேசம்

சிங்கம்புணரி, ஜூன் 11: சிங்கம்புணரி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேத்தான்காடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பிரச்சனை உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே ஊராட்சி நிர்வாகம் குடிதண்ணீர் வழங்குவதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு இரண்டு நாட்கள் மோட்டார் ஓடினாலும் அரை தொட்டி அளவு மட்டுமே தண்ணீர் சேமிக்க முடிகிறது. மேலும் அப்பகுதியில் 800 அடி வரை போர்வெல் போட்டும் தண்ணீர் இல்லை. எனவே எங்கள் பகுதியையும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைத்து தண்ணீர் வழங்க வேண்டும். உடனடியாக தகுந்த இடத்தில் போர்வெல் அமைத்து தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிங்கம்புணரி தாசில்தார் பஞ்சவர்ணம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிளை ஊராட்சி) சுந்தர மகாலிங்கம் ஆலோசனை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர மகாலிங்கம் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தற்காலிகமாக லாரிகள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் ஏற்றப்படும். மேல்நிலை தொட்டியின் கீழ் பகுதியில் பைப்புகள் வரிசையாக பொருத்தப்பட்டு குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போர்வெல் அமைக்க தகுதியான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் போர்வெல் அமைத்து தண்ணீர் விநியோகம் சீராக வழங்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு