×

உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து விதவை, முதியோர் உதவித்தொகைக்கு ஜமாபந்தியில் குவியும் விண்ணப்பங்கள்

திருவள்ளூர், ஜூன் 11: ஜமாபந்தியில் ஆதரவற்றோர் உதவித்தொகை கேட்டு ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து தகுதியற்றவர்களையும் அதிமுகவினர் விண்ணப்பிக்க வைப்பதால் வருவாய் துறையினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது குறுவட்டம் வாரியாக அனைத்து தாலுக்கா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நடந்து வருகிறது. மற்ற ஜமாபந்திகளுடன் ஒப்பிடுகையில், தற்போது ஏராளமான விண்ணப்பங்கள் முதியோர், விதவை உதவித்தொகை கேட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில் ஜமாபந்தி துவங்கிய முதல் நாளில் மட்டும் 3,700 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு உள்ளன. இதில், 2,000க்கும் மேற்பட்ட மனுக்கள் ஆதரவற்றோர் உதவித்தொகை கேட்டு வந்தவையாகும். இதன் பின்னணியில் மாஜி வார்டு கவுன்சிலர்கள், ஆளும் கட்சி நிர்வாகிகள் இருப்பதால் அனைத்தையும் பரிசீலிக்க வலியுறுத்தி ‘பிரஷர்’ கொடுக்கப்படும் என்ற அச்சம் வருவாய் துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கும் என்ற ஆசையில், ஒவ்வொருவரும் பல ஆயிரம் செலவழித்து விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுகுறித்து வருவாய் துறையினர் கூறுகையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், நகராட்சி, பேரூராட்சிகளின் மாஜி வார்டு கவுன்சிலர்களும், மாஜி ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் உள்ளவர்களிடம், ஆதரவற்றோர் உதவித்தொகைக்கான விண்ணப்பம் கொடுக்க வலியுறுத்துகின்றனர். குறிப்பாக ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் மேலிட ‘பிரஷர்’ கொடுத்து மனுக்களை பரிசீலிக்க வைக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர். இவ்வாறு கொடுப்பவர்களின் குடும்ப ஓட்டுகளை மொத்தமாக உள்ளாட்சி தேர்தலில் அள்ளலாம் என்ற கணக்கில், தகுதியில்லாத நபர்களையும் மனு கொடுக்க வைத்துள்ளனர். இந்த மனுக்களின் மீது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, உண்மை நிலை அறிந்து தகுதியான பயனாளிகளை தேர்ந்தெடுக்க காலதாமதம் ஆகும். அதற்குள் தேர்தல் வந்துவிடும் என்பதால் மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன’ என்றனர்.

Tags : widow ,elections ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு