×

பள்ளி விடுதிகளில் சேர ஜூன் 20க்குள் விண்ணப்பம்

சிவகங்கை, ஜூன் 7: பி.சி, எம்.பி.சி மற்றும் சீர்மரபினர் அரசு பள்ளி விடுதிகளில் சேர மாணவ, மாணவியர் ஜூன்.20க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,
சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி), மிகவும் பிற்படுத்தப்பட்டோர்(எம்.பி.சி), சீர்மரபினர் (டி.என்.சி) பள்ளி மாணவர்களுக்கென 22 விடுதிகள், மாணவிகளுக்கென 16 விடுதிகள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நான்காம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ, மாணவியர் சேர்ந்து படிக்க தகுதியுள்ளவர்களாவர். இவ்விடுதிகளில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவியரும் அரசு நிர்ணயித்துள்ள விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

மாணவர்கள் வசிப்பிடத்திலிருந்து படிக்கும் கல்வி நிலையம் குறைந்தபட்சம் 8 கி.மீ தூரத்திற்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதி மாணவியருக்கு பொருந்தாது. பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை விடுதி காப்பாளர்கள் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை, விண்ணப்பங்கள் பெற்ற இடத்திலேயே ஜூன்.20க்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் வேறு எந்த ஆவணமும் இணைக்க தேவையில்லை. விடுதியில் சேரும்போது சாதி, இருப்பிடம், வருமான சான்றிதழ் அளிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தலா ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : school hostels ,
× RELATED தமிழகம் முழுவதும் நவம்பர் 1ம் தேதி...