×

காளவாசல் முதல் முடக்குசாலை வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் தவிப்பு

மதுரை, ஜூன் 7: மதுரை - தேனி ரோடு நான்குவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதில் காளவாசல் முதல் முடக்குசாலை வரை ரோட்டில் வாகனங்களை இரண்டுபுறமும் நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்வதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் முதல் கொச்சி தேசிய நெடுஞ்சாலையாக ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. இந்த ரோடு, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த ரோட்டில் மதுரையில் இருந்து தேனி செல்லும் ரோடும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக காளவாசல் முதல் முடக்குசாலை வழியாக செல்லும் தேனி மெயின் ரோடு சமீபத்தில் அகலப்படுத்தப்பட்டது.  இந்த ரோடு திருநெல்வேலி, திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் இணைந்து தேனியை நோக்கி செல்வதால், தற்போது தென்மாவட்டம், மற்றும் சேலம், ஈரோடு, பெங்களூர் உள்ளிட்ட வடமேற்கு மாவட்டம் வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதிகளவில் தேனி மெயின் ரோடு வழியாகத்தான் மதுரை நகருக்குள் வந்து செல்கிறது. இதனால் தேனி ரோட்டில் வாகன பெருக்கம் அதிகரித்துள்ளது.

அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள இந்த ரோட்டில், காளவாசல், பி.பி.சாவடி, முடக்குச்சாலை, எச்எம்எஸ் காலனி ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்பட்டது. விபத்தினை தடுக்கவும். இது நான்கு வழிச்சாலை என்பதை பொது மக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் இந்த ரோட்டின் நடுவே தடுப்பு சுவரை தேசிய நெடுஞ்சாலைத்துறை   அமைத்துள்ளது. இதனால் தற்போது விபத்து ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், காளவாசலில் இருந்து முடக்குச்சாலை வரை எப்போதும் போல் ரோட்டின் இரண்டு பகுதியிலும், வாகனங்களை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

குறிப்பாக, மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான செல்லூர் ராஜூவின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தெற்கு, வடக்கு, மேற்கு மாவட்டத்திற்கு வந்து செல்லும் வாகனங்கள் விரைவாக இந்த ரோட்டில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் தவிக்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் முத்துக்கருப்பன் கூறுகையில், ‘அதிக போக்குவரத்து மிகுந்த இந்த ரோட்டில், விபத்தினை தடுக்க ரோட்டின் நடுவே தடுப்புச்சுவர் வைத்தது போல், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் அகற்ற வேண்டும். மேலும் காளவாசல் திருப்பத்தில், பஸ் ஸ்டாப் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. அதனை சற்று தள்ளி பஸ்ஸ்டாப்பை அமைக்க வேண்டும். அதன் மூலம் வாகன போக்குவரத்து நெரிசல் குறையும்’ என்றார்.






Tags : Kalaivasal ,
× RELATED காளவாசல் முதல் முடக்குசாலை வாகனங்கள்...