×

அரிமளம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம்

திருமயம், ஜூன் 7: அரிமளம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தையத்தில் 35 ஜோடி மாடுகளும், 13 குதிரை வண்டிகளும் கலந்துகொண்டன. வெற்றி பெற்ற மாடு, குதிரை உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
அரிமளம் அருகே புதுநிலைப்பட்டி கண்ணுடைய, குருந்துடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6 மணியளவில் புதுநிலைபட்டி செல்வவிநாயகர் கோயில் வளாகத்தில் இருந்து தொடங்கி மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் நடந்தது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 35 ஜோடி மாட்டு வண்டிகள், 13 குதிரை வண்டிகள் கலந்துகொண்டன. பந்தயமானது பெரிய மாடு, நடுமாடு, சிறிய மாடு என மூன்று பிரிவாக நடைபெற்றது.
இதில் பெரிய மாட்டு வண்டி போய் வர 8 மைல் தூரமும், நடு மாடு போய் வர 6 மைல் தூரமும், சிறிய மாடு போய் வர 5 மைல் தூரமும் போட்டி தூரமாக நிர்ணயிக்கபட்டிருந்தது. பெரிய மாடு பிரிவில் 6 ஜோடி மாடுகள் கலந்துகொண்டதில் முதல் பரிசு புதுக்கோட்டை மாவட்டம், தினையாக்குடி பெரிய அய்யனார், 2ம் பரிசு கருப்பூர் வீரையா, 3ம் பரிசு பொன்பேத்தி மருதுபாண்டியன், 4ம் பரிசு கே.புதுப்பட்டி அய்யனார் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.
நடு மாடு பிரிவில் 11 ஜோடி மாடுகள் கலந்துகொண்டதில் முதல் பரிசு ராமநாதபுரம் மாவட்டம் பதனகுடி சிவசாமி, 2ம் பரிசு புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி செந்தூர் டிராவல்ஸ், 3ம் பரிசு திருச்சி அன்பில் ஆச்சியப்பா, 4ம் பரிசு திருச்சி சிவா ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 18 ஜோடி மாடுகள் கலந்துகொண்ட நிலையில் முதல் பரிசை வெல்லாம் பரம்பூர் தியாகு, 2ம் பரிசை சொக்கலிங்கம்புதூர் ராமன், 3ம் பரிசை பூக்கொல்லை தியாகராஜ், 4ம் பரிசை கருப்பூர் வீரையா ஆகியோருக்கு சொந்தமான ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.
இதனை தொடர்ந்து கடைசியாக நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 13 குதிரை வண்டிகள் கலந்துகொண்டதில் முதல் பரிசை அதிராம்பட்டிணம் மனோ, 2, 3ம் பரிசை திருச்சி நம்பி, 4ம் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் புதுநிலைபட்டி சீமான் கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான குதிரை வண்டிகள் வென்றன.
மாடு, குதிரை வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற உரிமையாளருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. போட்டி நடைபெற்ற அறந்தாங்கி-காரைக்குடி நெடுஞ்சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று போட்டியை கண்டு ரசித்தனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை புதுநிலைப்பட்டி ஊரார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். கே.புதுப்பட்டி போலீசார் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Elvai ,temple festival ,Arimala ,
× RELATED வீரபத்திர சுவாமி கோயில் விழா