×

தமிழகத்தை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்ககோரி 18 சித்தர் வழிபாடு

ஜெயங்கொண்டம், ஜூன் 7: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராம மக்கள் 18 சித்தர்களிடம் தமிழகத்தை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தி வழிபாடு நடத்தினர்.
இதில் அகத்தியர், சிவவாக்கியர், திருமூலர், கோரக்கர், போகர், ராமதேவர், பாம்பாட்டி சித்தர், வான்மீகர், தன்வந்திரி உள்ளிட்ட 18 சித்தர்களுக்கும் முறையாக பூ, பழம் அவல் பொறி உள்ளிட்ட பூஜை சாமான்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. பூஜையில் 18 சித்தர்களுடைய உருவ படத்திற்கும் மலர் தூவி பூஜை நடத்தப்பட்டது. உலகத்தில் ஆண்ட பல அரசர்களுக்கும் புத்தி சொன்னவர்கள் நம் தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற 18 சித்தர்கள், 18 சித்தர்களும் நாட்டை ஆளும் அரசர்கள், மன்னர்கள் நெறி தவறி ஆட்சி செய்யும் போது அவர்களை வழிநடத்திச் சென்ற பெருமையும் புகழும் சித்தர்களையேச் சாரும். இதனை நினைவுப்படுத்தும் வகையில் தற்போதைய சூழலில் தமிழகத்தில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பல்வேறு இயற்கைச் சூழலை அழிக்கும் வண்ணம் பேரழிப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே உலகையே வழிநடத்திய பேராற்றல் கொண்ட 18 சித்தர்ககள் முன் கோரிக்கைகளை முன் வைத்து வழிபாடு நடத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.தமிழகத்தைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு எந்த ரூபத்திலாவது புத்தி சொல்லி தமிழகத்தை காக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டால் தமிழக மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே தமிழக மக்களின் நலன் கருதி பேரழிப்புத் திட்டங்களை கைவிட வேண்டும். அதற்கு அருள் புரிய வேண்டும் என கோரிக்கை வைத்து புதுக்குடி கிராம மக்கள் வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். புதுக்குடி கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக பஞ்ச பூதங்களை நெருப்பு, மண், பலூனில் காற்றை நிரப்பியும், நீரை வைத்தும் ஆகாயத்தை சாட்சியாக வைத்தும் படையலிட்டு 18 சித்தர்களுக்கு வேப்பிலை மாலை அணிவித்து ஓம் போற்றி என கோஷமிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

Tags : Siddhartha ,Tamil Nadu ,zone ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு