×

கேரளாவில் நிபா காய்ச்சல் எதிரொலி தமிழகத்தில் காய்ச்சலால் பாதித்தவர்கள் விவரங்களை தினமும் சேகரிக்க உத்தரவு சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கை தீவிரம்

வேலூர், ஜூன் 7: கேரளாவில் நிபா காய்ச்சல் எதிரொலியால் தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளின் விவரங்கள் தினந்தோறும் சேகரிக்கப்பட்டு தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கேரளாவில் கடந்த ஆண்டு நிபா காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மீண்டும் கேரளாவில் நிபா காய்ச்சல் பரவி வருகிறது. கேரளாவின் அண்டை மாநிலமான தமிழகத்திலும் நிபா காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து, கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தால், அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நிபா காய்ச்சல் தொடர்பாக மாநிலம் முழுவதும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவிலிருந்து சுற்றுலா மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கு யாராவது காய்ச்சல் வந்து மருத்துவமனையில் அனுமதித்து இருந்தால் அவர்களை பற்றிய விவரங்களை உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் தமிழகத்திலும் யாராவது காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்களா? என்பது உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகளில் காய்ச்சல் தொடர்பாக வரும் நோயாளிகள் விவரங்கள் தினந்தோறும் சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றாலும், அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவர். பன்றிகள், வவ்வால்கள் அதிகம் உள்ள பகுதிகளும் கண்காணிக்கப்படும். மேலும், ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அதிகப்படியான காய்ச்சல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாகமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு நிபா காய்ச்சல் குறித்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Nifa ,Kerala ,fever victims ,Tamil Nadu ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...