×

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பிழை

ஊட்டி, ஜூன் 5:   ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்றப்பட்ட பின், அந்த கார்டுகளில் பல்வேறு பிழைகள் மற்றும் புகைப்படங்கள் மாறிய போதிலும், அதனை மாற்ற எவ்வித நடவடிக்ைகயும் எடுக்காமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.  தமிழகம் முழுவதும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அனைத்து ரேஷன் கார்டுகளும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றும் பணி துவக்கப்பட்டது. இப்பணிகள் துவங்கிய போது, பெரும்பாலும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக பழைய ரேஷன் கார்டுகள், ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டன. இந்த கார்டுகளை மாற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், கார்டுகளை மாற்ற அதிக பணம் வசூலித்ததாக புகார்கள் வந்தன.

மேலும், இந்த ரேஷன் கார்டுகளில் பல்வேறு தவறுகள் இருந்தன. குறிப்பாக, புகைப்படங்கள் மாறி இருந்தன.  சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள், கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் எல்லாம் ரேஷன் கார்டுகளில் வரத்துவங்கின. இதனை மாற்ற விண்ணப்பித்த போது, அவர்களிடம் ஊழியர்கள் பணம் வசூலித்ததாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து அச்சுப் பிழைகள் மற்றும் புகைப்படங்கள் மாறியிருந்த ரேஷன் கார்டுகளை மாற்றும் பணிகளை தமிழக அரசு நிறுத்தியது. ஓரிரு நாட்களில் மீண்டும் ரேஷன் கார்டுகள் மாற்றும் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் இது வரை அச்சுப்பிழை ஏற்பட்ட ரேஷன் கார்டுகள் மற்றும் புகைப்படங்கள் மாறிய ரேஷன் கார்டுகளை மாற்றும் பணி நடக்காமல் உள்ளது.  இதனால், அரசு துறை சம்பந்தப்பட்ட பணிக்கு ரேஷன் கார்டுகளை காண்பிக்கும் போதும், சான்றிதழ்கள் பெற நகல் எடுத்து கொடுக்கும் போது, வேறு ஒருவரின் புகைப்படம் இருப்பதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.

மேலும் அச்சுப்பிழை மற்றும் புகைப்படங்கள் மாறிய ரேஷன் கார்டுகளால், அதனை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் சமயம் என்பதால், பல்வேறு சான்றிதழ்கள் பெற விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், பிழையுள்ள ரேஷன் கார்டுகளை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், அச்சுப்பிழை மற்றும் புகைப்படங்கள் மாறிய ரேஷன் கார்டுகளை மாற்றி கொடுக்கும் பணியை உடனடியாக துவக்க வேண்டும். மேலும், ரேஷன் கார்டுகள் மாற்றி கொடுக்கும் பணியில் உள்ளவர்கள் அதிக பணம் பெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED நீலகிரியில் போக்குகாட்டும் கோடை மழை