×

பள்ளிகள் திறந்தாச்சு... மாணவர்கள் உற்சாகம்... கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டை, ஜூன்4: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் நேற்று காலை இறைவணக்கத்துடன் தொடங்கின. மேலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளிக்கு வந்த புதிய மாணவ, மாணவிகளை சக மாணவிகள் பூ கொடுத்தும், இனிப்புகளை வழங்கியும் வரவேற்றனர்.
மேலும் நர்சரி பள்ளிகளில் குழந்தைகளை பள்ளியில் விட்டு செல்வதற்கு பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டனர். விடுதிகளில் தங்கி பயிலும் சில மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் பெட்டி, படுக்கைகளுடன் அவர்கள் வந்திருந்தனர். புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று எல்கேஜி., யூகேஜி.க்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்விஎஸ். ஜெயக்குமார் கலந்து கொண்டு மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பலூன்களை வழங்கி வரவேற்றார்.
இதில் புதியதாக 60 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா புத்தகங்களை வழங்கினார். இதில் வட்டார கல்வி அதிகாரி மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம் நன்றி கூறினார். இதேபோல புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் புதியதாக பள்ளியில் சேர்ந்து நேற்று வகுப்புகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : Schools ,summer holiday ,
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...