×

வீரகனூர்-ஆத்தூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

கெங்கவல்லி, ஜூன் 4: வீரகனூர்-ஆத்தூர் நெடுஞ்சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். வீரகனூர் பேரூராட்சியில் 7வது வார்டு, ஆத்தூர் மெயின் ரோட்டில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை தோறும் காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தை மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை தொடரும். பொதுவாக மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆத்தூர் -வீரகனூர் நெடுஞ்சாலை என்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் ஒதுங்கக் கூட இடமில்லாத அவல நிலை ஏற்படுகிறது. போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் இருப்பதில்லை.

கடந்த 2 வாரங்களாக இந்த வாரச் சந்தையில், இருசக்கர வாகனங்கள் திருடு போன சம்பவம் நடந்துள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சந்தையை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை மற்றும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், பேரூராட்சி நிர்வாகம் ஆத்தூர்-வீரகனூர் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, சந்தைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டும் கடைகளை போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Veeraganur-Attur ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி