×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு 1,66,777 புத்தகம் விநியோகம்

கிருஷ்ணகிரி, ஜூன் 4:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 1,66,777 புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ரோஜாப்பூ மற்றும் இனிப்புகளை வழங்கி வரவேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், ‘தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க காரணமான தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். இந்த கல்வியாண்டிலும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஒவ்வொரு மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்,’ என்றார்.

இதையடுத்து, ஆசிரியர்களின் வருகைப்பதிவு இயந்திரத்தை(பயோமெட்ரிக்) சிஇஓ துவக்கி வைத்தார். பின்னர் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தங்களை வழங்கினார். மாவட்டம் முழுவதும் உள்ள ப்ரிகேஜி ஆங்கில வகுப்பிற்கு 13 புத்தகங்கள், எல்கேஜிக்கு 66, யூகேஜிக்கு 76 புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும், முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு 6,271 புத்தகங்களும், 2ம் வகுப்பிற்கு 12,065, மூன்றாம் வகுப்பிற்கு 15,001, நான்காம் வகுப்பிற்கு 14,877, ஐந்தாம் வகுப்பிற்கு 15,335, ஆறாம் வகுப்பிற்கு 7,349, ஏழாம் வகுப்பிற்கு 18,648, எட்டாம் வகுப்பிற்கு 17,421, ஒன்பதாம் வகுப்பிற்கு 14,9421, 10ம் வகுப்பிற்கு 18,031, 11ம் வகுப்பிற்கு 12,604, 12ம் வகுப்பிற்கு 12,110 புத்தகங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 777 புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : book distributors ,Krishnagiri district ,
× RELATED முட்டை விற்பனை ஜோர்