×

சிவகாசி தாலுகாவில் ஜமாபந்தி

சிவகாசி, ஜூன் 4: சிவகாசி தாலுகாவில் இன்று முதல் 12ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளதாக, தாசில்தார் வானதி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: சிவகாசி தாலுகா அலுவலகத்தில், இன்று ஜமாபந்தி தொடங்குகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொள்வார். முதல் நாளில் ஆணையூர், கொங்கலாபுரம், வேண்டுராயபுரம், எம்.துரைச்சாமிபுரம், மாரனேரி, சிவகாசி, வாடி,  விஸ்வநத்தம், நாரணாபுரம், வி.சொக்கலிங்கபுரம் ஆகிய தாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படும்.

நாளை மறுநாள் பேர்நாயக்கன்பட்டி, அனுப்பன்குளம், வெற்றியூரணி, தாயில்பட்டி, சுப்பிரணியபுரம், சல்வார்பட்டி, 7ம் தேதி நெடுங்குளம், காளையார்குறிச்சி, நமஸ்கரித்தான்பட்டி, பூரணசந்திரபுரம், வடபட்டி, கிருஷ்ணபேரி, ஈஞ்சார், 12ம் தேதி கவுண்டம்பட்டி, மேலாமத்துார், ஆனைக்குட்டம், ஏ.மீனாட்சிபுரம், காரிசேரி, கீழதிருத்தங்கல் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பெண் போலீஸ் மீது தாக்குதல்

ராஜபாளையம் அருகே, கணபதி சுந்தரராஜபுரத்தை சேர்ந்த அழகுராணி (35), திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ்காரர். இவரது வீடு அருகே, அவரது தாய் பாக்கியத்தாய் பெட்டிக்கடை வைத்துள்ளார். அதே பகுதியில் கந்தசாமி என்பவரும் கடை வைத்துள்ளார். கந்தசாமிக்கும், அழகுராணிக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அழகுராணி நேற்று முன்தினம் டூவீலரில், தனது தாயை ஏற்றிக்கொண்டு, சகோதரி வீட்டுக்கு சென்றபோது, கந்தசாமிக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கந்தசாமி, அவரை தாக்கியதாக, சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து எஸ்.எஸ்.ஐ சந்திரமோகன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

முதல் மனைவி மீது தாக்குதல் கணவர் கைது

ராஜபாளையம் அருகே, நக்கனேரியைச் சேர்ந்த ஜெயபால் பாண்டியன் (34), அதே பகுதியைச் சேர்ந்த இந்திராதேவியை (32), பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஜெயபால் பாண்டியன் ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்த முருகேஸ்வரியை (23) இரண்டாவது திருமணம் செய்து, அங்கேயே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஜெயபால் பாண்டியனின் தாத்தா இறந்தார். அதை விசாரிக்க இந்திராதேவி வந்தார். அப்போது ஜெயபால் பாண்டியன், அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில், ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிந்து, ஜெயபால் பாண்டியனை கைது செய்தனர்

மகன் கண் முன்னே தந்தை சாவு

ராஜபாளையம் சம்மந்தபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (37). இவரது மகன் கார்த்திக் குமார் (10). இருவரும் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக செல்வம் கிணற்றில் தவறி விழுந்தார். இதைப் பார்த்து திகைத்த சிறுவன் வீட்டிற்கு வந்து தாய் சிவகாமியிடம் நடந்ததை தெரிவித்தான். உடனே அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களுடன் கிணற்றுக்குச் சென்று பார்த்தபோது, செல்வத்தை காணவில்லை. இது தொடர்பாக சிவகாமி கொடுத்த புகாரின்பேரில், ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய போலீசார், கிணற்றில் இறங்கி, இறந்த நிலையில், செல்வத்தின் உடலை மீட்டனர்.

Tags : Sivakasi Taluka ,
× RELATED சிவகாசி தாலுகா அலுவலகத்தில்...