×

சாத்தங்குடியில் இடிந்து விழும் அபாயத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்

திருமங்கலம், ஜூன் 4: கட்டிடங்கள் சேதமடைந்து காரைகள் பெயர்ந்த நிலையில் இயங்கிவரும் சாத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தால் நோயாளிகள் பீதியடைந்து வருகின்றனர். திருமங்கலம் அருகேயுள்ளது சாத்தங்குடி. இங்கு உசிலம்பட்டி ரோட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சாத்தங்குடி, காண்டை, அம்மாபட்டி, வாகைகுளம், பொன்னமங்கலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இங்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். 2 டாக்டர்கள், 5 நர்சுகள் பணிபுரியும் இந்த ஆரம்பசுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான அனைத்து சிகிச்சைகளும், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடம் தான் படுமோசமாக காணப்படுகிறது. மேற்கூரை சிதைந்து, காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக்காலங்களில் மருத்துவமனை வளாகத்தின் பல்வேறு பகுதிகள் ஒழுகுகின்றன. இதனால் பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர். சாத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் குவார்டர்ஸ் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் ஊழியர் குடியிருப்பு சமீபத்தில் கட்டப்பட்டதால் ஓரளவு நன்றாக உள்ளது.

ஆனால், டாக்டர் குவார்டர்ஸ் படுமோசமாக காணப்படுகிறது. இதில் மேற்கூரைகள் பெயர்ந்து வானமே எல்லையாக காட்சிளிக்கிறது. இதனால் மருத்துவர்கள் யாரும் இங்கு தங்குவதில்லை. குவார்டர்ஸில் தண்ணீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும இல்லை. இருப்பினும் சாத்தங்குடியை சுற்றியுள்ள கிராமமக்கள் தங்களது அவசர தேவைக்கான மருத்துவமனையாக இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டி, மருத்துவர் குடியிருப்பு உள்ளிட்டவைகளையும் புதுப்பிக்கவேண்டும் என 20 கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : health center ,collapse ,Sathankulam ,
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...