×

கீரிப்பாறையில் இருந்து சென்ற மேலும் 36 பேரல்கள் திரும்பின ரப்பர் கழகத்திற்கு ₹1 கோடி நஷ்டம் தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு

நாகர்கோவில், ஜூன் 4 : கீரிப்பாறையில் உள்ள அரசு ரப்பர் தொழிற்கூடத்தில் இருந்து சென்ற மேலும் 36 ரப்பர் பால் பேரல்கள் கெட்டு போனதாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதால் அரசுக்கு ரூ.1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறினார். குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகம் கீரிப்பாறை, மணலோடை, சிற்றார், மயிலாறு, கோதையாறு ஆகிய 5 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகின்றன. சுமார் 5 ஆயிரம் ஹெக்டேரில் அரசு ரப்பர் தோட்டம் உள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால் வடிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ரப்பர் மரங்களில் பால் வடிப்பு செய்யப்பட்டு, அவை கீரிப்பாறையில் உள்ள அரசு ரப்பர் தொழிற்கூடத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு பேரல்களில் நிரப்பப்பட்டு, பின்னர் டெண்டர் மூலம் தனியார்களுக்கும் விற்பனை செய்யப்படும். 1 பேரலில் 196 கிலோ ரப்பர் பால் நிரப்பப்படும். ரப்பர் பால் கெட்டு போகாமல் இருக்க அமோனியம் கேஸ் நிரப்பப்படுவதும் வழக்கம். பேரல்களில் நிரப்பப்பட்ட 3 மாதங்களுக்குள் இந்த ரப்பர் பால் விற்பனை செய்யப்பட வேண்டும். பெரும்பாலும் தனியார்கள் இதை வாங்கி சென்று, கோட்டயத்தில் உள்ள தர பரிசோதனை மையத்தில் தரத்தை பரிசோதனை செய்வார்கள்.

இவ்வாறாக சமீபத்தில் கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்கூடத்தில் இருந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட 112 ரப்பர் பேரல்களில் இருந்த ரப்பர் பால் கெட்டு போய் விட்டதாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.50 லட்சத்துக்கும் மேல் இழப்பீடு ஏற்பட்டு உள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த இழப்பீட்டுக்கு முழுக்க, முழுக்க அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என கூறிய சங்க நிர்வாகிகள், கமிஷன் பிரச்சினைக்காகவே பேரல்களில் நிரப்பப்பட்ட ரப்பர் பால்களை இருப்பு வைத்து விட்டனர் என்றும்  கூறினர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடமும் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்ட மேலும் 36 பேரல்கள் ரப்பர் பாலும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள ரப்பர் பால்களும் கெட்டு போய் உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர மேலும் 1000 பேரல்கள் வரை ரப்பர் நிரப்பபட்டு இருப்பில் வைத்துள்ளதாகவும், அவையும் பெரும்பாலும் கெட்டு போனதாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக குமரி மாவட்ட சோனியா, ராகுல் பொது தொழிலாளர் சங்க பொது செயலாளர் குமரன் கூறியதாவது :
கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்கூடத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட ரப்பர் பால் கெட்டு போனதற்கு தொழிற்கூட அதிகாரியின் அலட்சியமே காரணம். இதை கவனிக்க வேண்டிய அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் விடுமுறையில் உள்ளார். அரசு ரப்பர் கழக பொது மேலாளர் பொறுப்பை மாவட்ட வனத்துறை அதிகாரி கவனித்து வருகிறார். அவராலும் இந்த விவகாரத்தை முழுமையாக கவனிக்க முடியவில்லை. ரப்பர் பால் வடிப்பு செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பேரல்களில் நிரப்பப்பட்ட 3 மாதங்களில் விற்பனை செய்திருக்க வேண்டும். ஆனால் ஜனவரியில் நிரப்பப்பட்ட பேரல்களை விற்பனை செய்யாமல் இருப்பில் வைத்ததால், 112 பேரல்களில் இருந்த ரப்பர் பால் கெட்டு போய் உள்ளது. இதை மறு சுத்திகரிப்பு செய்வதன் மூலம் மேலும் பல லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்படும்.  அதிகாரிகள் சிலர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, ரப்பர் பால் பேரல்களை இருப்பு வைக்கிறார்கள். தற்போது இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். எனவே இது பற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தியாவிலேயே சிறந்த ரப்பர் குமரி மாவட்ட ரப்பர் தான் என்ற பெயரும் உண்டு. அதற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். இதற்கு காரணமான அனைத்து அதிகாரிகளையும் தற்காலிக பணி நீக்கம் செய்து, விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் தமிழக அரசு அலட்சியமாக இருந்தால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார்.

கலெக்டர் விசாரிப்பாரா?

அரசு ரப்பர் கழகத்தில் மாவட்ட கலெக்டரும் இயக்குனர் ஆவார். குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த இழப்பீடு விவகாரத்தில் மாவட்ட கலெக்டரும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு ரப்பர் கழகம் நஷ்டத்தில் உள்ளது என கூறி, ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்காத தமிழக அரசு, இவ்வாறு பல கோடி நஷ்டம் ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருவது ஏன்? என்ற கேள்வியும் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags : rubber corporation ,
× RELATED கீரிப்பாறையில் அரசு ரப்பர்...