*சூழியல் பூங்கா அமைக்க திட்டம் : தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
நாகர்கோவில் : கீரிப்பாறையில் சூழியல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம், வனத்துறைக்கு கைமாற உள்ளதாகவும், இதை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, மருதம்பாறை, குற்றியாறு, கல்லாறு, சிற்றார், மயிலார் ஆகிய 9 இடங்களில், தமிழ்நாடு அரசின் ரப்பர் கோட்டங்கள் உள்ளன.
அரசு ரப்பர் கழகத்தின் சார்பில் இயங்கி வரும் இந்த ரப்பர் தோட்டங்களில் உள்ள ரப்பர் மரங்களில் இருந்து ரப்பர் பால் வெட்டி எடுத்தல், அதை பதப்படுத்தி ரப்பர் சீட்டுகளாக மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் உள்ளன. இதில் கீரிப்பாறையில் அரசு ரப்பர் தொழிற்கூடம் அமைந்துள்ளது. மொத்தம் 4,870 ஹெக்டேர் பரப்பளவில் அரசு ரப்பர் தோட்டம் உண்டு. இதில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே ஊதிய உயர்வு கோரி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், கடந்த அதிமுக ஆட்சியில் போது பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியும் தீர்வு கிடைக்க வில்லை. 80 கட்டத்துக்கு மேல் பேச்சு வார்த்தை நடந்தும் முடிவு இல்லை. இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின், ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தற்போதும் சம்பள உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கீரிப்பாறை ரப்பர் கோட்டத்தில் உள்ள கூப் எண் 2ல் 15 ஏக்கர் பரப்பளவு பகுதியை வனத்துறைக்கு கொடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இதில் வனத்துறை சார்பில் சூழியல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிலத்தை அளவீடு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன. சூழியல் பூங்காவாக அறிவிக்கப்பட்ட பின், அந்த பகுதியில் உள்ள அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களும் வெளியேற்றப்படுவார்கள் என்பதால், இந்த திட்டத்துக்கு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்திலேயே கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் மரங்களில் இருந்து தான் அதிக பால் வருகிறது. அரசு ரப்பர் தொழிற்கூடமும் இந்த பகுதியில் தான் உள்ளது. இந்த பகுதி வனத்துறைக்கு கைமாற்றினால், அரசு ரப்பர் கழகமே முடங்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் போது ரப்பர் மரங்கள் சரிவர நடப்படாமல் போடப்பட்டன. அரசு ரப்பர் கழகத்தை மூடி விட்டு ஒட்டு மொத்தமாக அனைத்து பகுதிகளையும் வனத்துறைக்கு சொந்தமாக்க திட்டமிட்டு வனத்துறை இந்த வேலைகளை செய்கிறது. எனவே அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான இடத்தை, வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
அரசு ரப்பர் கழகமே இல்லாத நிலை ஏற்படும்
இது குறித்து சோனியா, ராகுல் பொது தொழிலாளர்கள் சங்க பொது செயலாளர் என்.குமரன் கூறுகையில், அரசு ரப்பர் கோட்டம் கீரிப்பாறை பிரிவில் 72 நிரந்தர பால் வடிப்பு தொழிலாளர்களும். 50 தற்காலிக பணியாளர்களும் உள்ளனர். கீரிப்பாறை பிரிவில் கூப் எண் 2ல் 15 ஏக்கர் நிலத்தை வனத்துறைக்கு கொடுத்தால், இந்த தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகி விடும்.
இவ்வாறு தொடர்ச்சியாக வனத்துறை அரசு ரப்பர் கழகத்தை கபளீகரம் செய்து, கடைசியில் அரசு ரப்பர் கழகமே குமரி மாவட்டத்தில் இல்லாத நிலை ஏற்படும். அரசுக்கும் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும். எனவே வனத்துறைக்கு கொடுக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
சூழியல் பூங்கா அமைப்பதற்காக நடந்து வரும் நில அளவீடு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏழைகளின் வாழ்வாதாரமான அரசு ரப்பர் கழகத்தையும், தொழிலாளர்களையும் காப்பாற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மனு அனுப்பி உள்ளோம் என்றார்.
The post கீரிப்பாறையில் அரசு ரப்பர் கழகத்துக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு கை மாறுகிறது appeared first on Dinakaran.