×

சிந்தாதிரிப்பேட்டை, மேடவாக்கம் பகுதிகளில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 52 சவரன் நகைகள் கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை மற்றும் மேடவாக்கம் பகுதிகளில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 52 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சிந்தாதிரிப்பேட்டை குருவப்பா தெருவை சேர்ந்தவர் சங்கர் (43). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மங்கையர்க்கரசி. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சங்கர் வழக்கமாக நேற்று காலை அலுவலகத்துக்கு சென்று விட்டார். கோடை  விடுமுறை முடிந்து ேநற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால், சங்கரின் 2 குழந்தைகளும் காலையிலேயே பள்ளிக்கு சென்று விட்டனர்.பின்னர் காலை 10 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு, மங்கயர்க்கரசி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று தனது குழந்தைகளை அழைத்து கொண்டு 11.45 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு  உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். அப்போது, கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் வீட்டின்  பூட்டை சத்தம் இல்லாமல் உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குருவப்பா தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்து வருகின்றனர்.„ மேடவாக்கம் வெள்ளைக்கல், கலைஞர் நகரை  சேர்ந்தவர் தங்கராஜ் (30). இவர், வீட்டை பூட்டி விட்டு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியூர்  சென்றிருந்தார். அங்கிருந்து நேற்று காலை வீட்டிற்கு திரும்பியபோது, கதவின்  பூட்டு  உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே  சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.  „ பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன்  (40). இவர்,  வெளியூர் சென்று நேற்று வீடு திரும்பினார். அப்போது, பூட்டு  உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில்  இருந்த 18 சவரன் நகைகளை மர்ம நபர்கள்  கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அதே பகுதியில்,  மேலும் 2 வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், உள்ளே பணம், நகை எதுவும் இல்லாததால் திரும்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக  பள்ளிக்கரணை போலீசார்  வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு  செய்து வருகின்றனர்.

Tags : houses ,Madavakkam ,Savarna ,
× RELATED குமரி முழுவதும் பரவலாக சாரல் மழை: மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்தன