×

கொளுத்தும் கோடை வெயில் தென்னங்கன்றுகளை காப்பாற்ற மூடி பாதுகாக்கும் விவசாயிகள்

கும்பகோணம், மே 30: கோடை வெயிலில் இருந்து காப்பாற்றுவதற்காக தென்னங்கன்றுகளை கீற்றுகளால் மூடி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் முழுவதும் கடந்த 3 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திர வெயிலின் அதைவிட அதிகமாக உள்ளது. இதனால் பகல் நேரங்களில் வெயிலின் கொடுமையால் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்பட்டனர். ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் வயல்கள் காய்ந்து வெடித்து வருகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மின்மோட்டாரை கொண்டு விவசாய சாகுபடி செய்து வருகின்றனர்.இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் 5 ஏக்கரில் தென்னை மரக்கன்றுகளை மின்மோட்டார் தண்ணீரை கொண்டு நட்டு வந்துள்ளார்.ஆனால்  நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் மின்மோட்டாரில் தண்ணீர் வரத்து குறைந்தது. தற்போது அடித்து வரும் வெயிலின் உக்கிரத்தால் நட்டு வைத்துள்ள தென்னங்கன்றுகள் காய்ந்து கருகி விடும் என்பதால் தென்னைகீற்றுகளால் வெயில் படாதவாறு மூடி வைத்துள்ளனர். இதனால் கோடை வெயிலில் இருந்து தப்பித்து தென்னங்கன்று பாதுகாப்பாக வளரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தென்னை விவசாயி கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்து வந்த நிலையில் போதியளவில் ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வராததாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலுல் மின் மோட்டாரில் தண்ணீர் குறைந்து வந்தது. இதனால் வருமானம் இல்லாமல் கடன் வாங்கி விவசாயம் செய்தாலும் போதியளவில் வரத்து இல்லாததால் இந்த முறை வயலில் தென்னங்கன்று நட்டு வைத்துள்ளேன். நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீரை விட குறைவான தண்ணீரும், பராமரிப்பும் குறைவாகும்.
இதனிடையில் ஊடுபயிராக பல்வேறு பணப்பயிர்களை நடவு செய்தால் போதியளவு வருமானம் கிடைக்கும். அதனால் தென்னங்கன்றை நட்டு வைத்துள்ளேன். தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் நட்டு வைத்துள்ள தென்னங்கன்றுகள் கோடைகால அக்னி நட்சத்திர வெயிலால் கன்றுகள் காய்ந்து கருகாமல் இருக்க வெயில் படாதவாறு தென்னை தோகைகளை கொண்டு மறைத்தும் வைத்துள்ளேன்.மின்மோட்டாரை நம்பி தென்னங்கன்றை நட்டு வைத்துள்ளதால், மின்சார துறையினர் மின்சாரம் வழங்காவிட்டால் அனைத்து தென்னங்கன்றுகளின் நிலை கேள்வி குறியாகி விடும். எனவே மின்சாரத்துறையினர் தற்போது மின்சாரம் மிகவும் குறைவாக வழங்கும் நிலையில் பற்றாக்குறையாக இருப்பதால் தொடர்ந்து மின்சாரம் வழங்க வேண்டும் அல்லது மின்சாரம் வழங்கும் நேரத்தை அறிவித்து மின்தடையை அறிவிக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED தஞ்சாவூர் கொடிக்காலூர் பகுதியில்...