×

கழிவுநீர் கண்மாய்களில் கலப்பதால் சம்பை ஊற்று நீர் சுவை மாறும் அபாயம்

காரைக்குடி, மே 30: காரைக்குடியின் குடிநீர் ஆதாரமாக உள்ள சம்மை ஊற்றை சுற்றி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வாட்டர் சர்வீஸ் ஸ்டேசன்கள் அதிகரிப்பதால் குடிநீரின் சுவை மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரைக்குடி சிறப்பு நிலை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 13.75 சதுர கி.மீ பரப்பளப்பு உள்ள இப்பகுதியில் 153.013 கி.மீ சாலைகளும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன.

2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1 லட்சத்து 6 ஆயிரத்து 793 பேர் உள்ளனர். நிலத்தடி நீரை சேமிக்க 36 வார்டுகளிலும் 13க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் நிறைந்து நகரை சுற்றி உள்ள காரைக்குடி கண்மாய், அதலக்கண்மாய், நாட்டார் கண்மாய், செஞ்சைக்கும், தெற்கு தெருக்கும் இடையே உள்ள கண்மாய் மற்றும் நெட்னி கண்மாய் ஆகியவற்றுக்கு சென்று நிறையும்.

இந்த தண்ணீர் கண்மாய் பாசனத்தை நம்பி உள்ள 1000 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. நகரின் வளர்ச்சியால் மழைநீர் வரும் வரத்து கால்வாய்களும், நீர் வெளியேறும் கால்வாய்களும் காணாமல் போய் விட்டது. தவிர நகரின் பிரதான பிரச்னையாக கழிவுநீர் வெளியேற்றம் மாறி வருகிறது. வீடுகளில் இருந்து தினமும் 20 லட்சம் லிட்டருக்கு மேல் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த கழிவுநீர் கண்மாய்களில் தான் போய் சங்கமமாகி வருகிறது.

இதனால் காரைக்குடி கண்மாய்க்கு அருகே உள்ள சம்பை ஊற்றை சுற்றி கழிவுநீர் தேங்கி கிடக்கும் அவலம் உள்ளது. கழிவுநீர் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தடியில் இறங்கி குடிநீரோடு கலந்து விடும் இதில் உள்ள கடின தன்மை காரணமாக குடிநீரின் சுவையும் மாறி வரும் நிலை உள்ளது. அதேபோல் இப்பகுதியை சுற்றி வர்த்தக நிறுவனங்கள் அமைக்க தடைவிதிக்க வேண்டும். வாட்டர் சர்வீஸ் ஸ்டேசன்கள் அதிகரித்து வருவதால் இங்கிருந்து வெளியேறும் ஆயில் கலந்த தண்ணீரால் தண்ணீர் கடின தன்மையாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற நிறுவனங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் செல்ல நிரந்தர நடவடிக்கையாக பாதாளா சாக்கடை திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வரபிரசாதமாக ஆர்டீசீயன் ஊற்றான சம்பை ஊற்றை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED கிராம சபை கூட்டங்களில் மீண்டும்...